Friday, February 18, 2011

இஸ்ரோ - அந்தரீக்ஷ் - தேவாஸ்

நம்மில் சிலரேனும் - இஸ்ரோ - தேவாஸ் -எஸ் பாண்ட் ஊழல் பற்றி 
கேள்விப்பட்டு இருப்போம் . நன்பர்கள் சிலரிடம் பேசிப்பார்த்ததில், 
அரசின் எத்தனையோ ஊழல்களில் இதுவும் ஒன்று என தலையை 
ஆட்டிக்கொண்டு சென்று விட்டனர். அப்படி என்னதான் நடந்துள்ளது என 
பார்ப்போமா?


நாம் முன்பெல்லாம் டி.வி எப்படிப் பார்ப்போம்?  மாடியில் படல் போல 
"ஆண்டெனா" கள் அமைத்து. வி.ஹெச்.ஃப்,  யு.ஹெச்.ஃப் முறைகளில்.
ஆரம்பத்தில் UHF, VHF அதிர்வெண்களில் 12 நிலையங்கள் என்று 
தொடங்கி, பின்னர் படிப்படியாக அனலாக் முறையிலேயே 90 
நிலையங்கள் வரை கேபிள் வழியாகக் கொடுக்கமுடிந்தது. இந்த 
தரைவழித் தொலைக்காட்சி தொழில் நுட்பம் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க 
வில்லை. வானில் செயற்கைக்கோள்களை அனுப்பும் தொழில்நுட்பம் 
முன்னேற முன்னேற, கேபிள் அண்ட் சாடிலைட் தொலைக்காட்சி 
முன்னுக்கு வந்தது. 

பெரும் 'டிஷ்களை' நிறுவி, கேபிள் ஆப்பரேட்டர்கள் சாடிலைட் 
சிக்னல்களை பெற்று, செப்புக் கம்பியால் ஆன கோ-ஆக்ஸ் கேபிள்கள்
மூலம் வினியோகம் செய்தனர். பின்னர் இந்த கோ-ஆக்ஸ் கேபிள்களுக்கு 
பதிலாக 'ஆப்டிகல்' எனப்படும், டிஜிட்டல் முறையில் கேபிள் வழியாக 
சிக்னல்கள் அனுப்பப்பட்டபோது,  200 சானல் களுக்கு மேலும் 
பார்க்கமுடிந்தது. அற்புதமான வீடியோ தரம்.  இந்த ஃபைபர் ஆப்டிக் 
கேபிள்கள் வீட்டுக்கே வந்துவிட்டால்,  ஆயிரக்கணக்கான சேனல்கள் 
பார்க்கலாம். இந்த சூழ்னிலையில் தான் டி.டி.ஹெச் எனப்படும் 
சாடிலைட்ககளிலிருந்து வீட்டிற்கு நேரடியாக சிக்னல்கள் பெறும் முறை 
வந்தது.  கேபிள் அண்ட் சாடிலைட்டும் சரி, டி.டி.எச்சும் சரி, இஸ்ரோ 
அனுப்பியுள்ள இன்சாட் செயற்கைக்கோள்களில் டிரான்ஸ்பாண்டர்களை 
லீஸ் செய்து அதன்மூலமாகவே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன.  
இந்தியாவில்  தூரதர்ஷன், டிஷ் டிவி, சன் டைரைக்ட், டாடா ஸ்கை, 
ரிலையன்ஸ் பிக், ஏர்டெல் என்ற ஆறு நிறுவனங்கள் டி.டி.எச் சேவையை 
தருகின்றன.

முன்பு,  இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு 150 மெகா 
ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு எஸ் 
பாண்ட் அலைக்கற்றை என்று பெயர். இந்த அலைக்கற்றையில்தான் 
முன்பு தூர்தர்ஷன் போன்ற சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. 
பின்னர், இந்த எஸ் பாண்ட்டில் இருந்து, க்யூ பாண்ட்டுக்கு மாறிக் 
கொண்டனர். இதில் இருந்துதான் இப்போது சன், டாடா, ஏர்டெல் என்று பல 
சேனல்கள் டி.டி.ஹெச். ஒளிபரப்பை நடத்துகின்றன. காலியாக இருந்த 
எஸ் பாண்ட்-ஐ வைத்து இஸ்ரோ வியாபாரத்தைத் தொடங்கத் 
திட்டமிட்டது.  இந்த காலியான எஸ் பாண்ட் மூலம்,  பிராட் பேண்ட் 
சேவை தரமுடியும் (வாண் நோக்கிய கிண்ணங்களை அமைத்து). 
இம்முறையில்,அமெரிக்காவில் டி.டி.எச் சேவை வழியாக இண்டெர்நெட் 
இணைப்பும்கூடத் தருகிறார்கள். இந்தியாவில் யாரும் இன்னமும் 
இதனைச் செய்யவில்லை. 


இந்த சமயத்தில், இஸ்ரோவைச் சேர்ந்த டாக்டர் எம்.ஜி.சந்திரசேகர் ஓய்வு பெற்றும், இன்னும் சிலர், இஸ்ரோவிலிருந்து வெளியேறி,தேவாஸ் மல்டி 
மீடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியை தொடங்கினர். இவர்கள் 
இஸ்ரோ வசம் உள்ள அதிக சக்தி வாய்ந்த 70 மெகா ஹெர்ட்ஸ் 
அலைக்கற்றையை, இலவசமாக, தங்கள் வசம் கொண்டுவரும் 
முயற்சிக்கு வித்திட்டனர்.  இதை 4ஜி என்று குறிப்பிடலாம். 12 
வருடங்களுக்கு இவர்களுக்கு லைசென்ஸ் தரப்படுகிறது. இஸ்ரோ 
நிறுவனம் தன்னுடைய வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் 
கார்ப்பரேஷன் மூலம் இந்த ஒப்பந்தத்தை செய்தது. இந்த 
ஒப்பந்தத்தின்படி, 12 வருட காலத்துக்குப் பின்னரும் இதைப் 
புதுப்பித்துக்கொள்ளலாம்.


2-ஜி விவகாரத்தில் நாடே கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 4-ஜி 
விவகாரம் ஒப்பந்தமும் வெளியானதைக் கண்டு பிரதமர் 
அலுவலகத்துக்கு பயங்கர அதிர்ச்சி. இந்த விவகாரம் அரசுக்கு தெரிந்து 
நடந்ததா? இல்லை அரசை ஏமாற்றிவிட்டு அவரைச் சுற்றி இருக்கும் 
பரிவாரங்கள் அலைக்கற்றையை முழுங்கியதா?’ என்ற கேள்விக்குத்தான் 
பதிலை பத்திரிகைகள் தேடுகின்றன.  தெரியாமல் நடந்துள்ளது என்றால், 
இதைவிட கோமாளித்தனம் ஒன்றும் இல்லை. தெரிந்து நடந்தது என்றால், 
நடந்தவைகளுக்கு அரசு பதில் சொல்லியாக வேண்டும். இந்திய அரசிடம் 
இருக்கின்ற சென்சிட்டிவ்வான பல துறைகளில் ஒன்று விண்வெளி. 
இதில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஒரு அரசு இருந்தால், 
என்ன சொல்ல?  தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த 
தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கி 2005 ஜனவரி 28-ல் ஓர் 
ஒப்பந்தத்தைப் போட்டது. அந்த ஒப்பந்தம், மத்திய அமைச்சரவைக்கு 
சரியாக விளக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி 
இரண்டு செயற்கைக்​கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியாக 
வேண்டும். இதைத்தான் தெரியாது என்கிறது மத்திய அரசு. சாதாரணமாக 
ஒரு செயற்கைக்கோள் தயாரிக்க நூற்றுக்கணக்கான கோடிகள் 
செலவாகும். சம்பந்தப்​பட்ட அமைச்சருக்கோ, பிரதமருக்கோ தெரியாமல் 
இந்த செயற்கைக்கோள் திட்டம் தொடங்கப்படாது. ஆனால், 
பிரதமருக்குத் தெரியாது என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் 
வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களிடம் ஒப்புக் கொண்டார். அப்படி​
யானால், பிரதமருக்குத் தெரியாமல் மறைத்தவர்கள் யார்?  

 2-ஜி-யில் சிக்கிக் கொண்ட சில தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், 
கடந்த ஆண்டே இந்த விவகாரத்தை வெளியே லீக் செய்தார்கள். சட்ட 
அமைச்சகம், ''மற்ற போலீஸ் துறைக்கும் ராணுவத்துக்குமே ஸ்பெக்ட்ரம் 
அலைக்கற்றை பற்றாக்குறையாக உள்ள நிலையில், மல்டி மீடியாவுக்கு 
ஒதுக்கத் தேவையில்லை!'' என்று அறிவுரை கூறியது.  2005-ம் ஆண்டு 
ஒதுக்கப்பட்டு, எல்லா பணிகளும் முன்னோட்ட நடவடிக்கைகளும் 
முடிக்கப்பட்ட பின்னர், 2010 ஜூலை மாதம்தான் கூடுதல் சொலிசிட்டர் 
ஜெனரல் மோகன் பராசரனின் பரிசீலனைக்கு இந்த ஃபைல் அனுப்பி 
வைக்கப்பட்டு இருக்கிறது. 2005-ல் தேவாஸ் நிறுவனத்துக்காகத் 
தயாரிக்கப்பட இருந்த செயற்கைக்கோளுக்கு அனுமதி கேட்டு, 
கேபினெட்டுக்கு இஸ்ரோ ஃபைல் அனுப்பும்போது, சட்டப் பரிசீலனை 
செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.  அதற்குப் பின்னால்  
பரிசீலனை செய்யப்பட்டதா?  அப்போதும் இல்லை. இவர்களுக்குப் பயம் 
வந்ததே ஸ்பெக்ட்ரம் 2-ஜி விவகாரம் வெடித்து... சி.பி.ஐ. வழக்குப் பதிவு 
செய்த பிறகுதான். அதன் பிறகும்கூட தடுப்பு நடவடிக்கையில் 
இறங்காமல், மறைக்கும் காரியங்களில்தான் இறங்கினர் அதிகாரிகள்.


கடந்த 7-ம் தேதி, பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததுமே லைசென்ஸ் ரத்து என்று அறிவித்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்​பட்டார்கள்!
தவறு என்று தெரிந்தும், பல நாள் வரை ஏன் ஒப்பந்தத்தை ரத்து 
செய்யவில்லை? காரணம், தேவாஸ் நிறுவனம் ஏற்கெனவே இந்த 
ஒப்பந்தத்தை வைத்து முதலீடுகளைப் பெற்றுள்ளதோடு இந்தியன் 
ரயில்வேக்கும், இன்டர்நெட் சேவைகளை வழங்க சில 
முன்னோட்டங்களையும் செய்து காட்டி வருகிறது. இதோடு, 
இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸுக்கும், தேவாஸுக்கும் இடையேயான 
ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அதற்குக் கோடிக்கான தொகையை 
ஆன்ட்ரிக்ஸ் கொடுக்க வேண்டியது வருமாம். 


முறைகேடான 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களையே ரத்து செய்ய முடியாது என்று சொல்லி வருவது மாதிரி இதிலும் சிக்கல்கள் உண்டு. ஆக, 2-ஜிக்கு  இணையான சிக்கல்களில் இப்போது 4-ஜியிலும் மாட்டிக்கொண்டுள்ளது.
இரண்டு செயற்கைக் கோள்களையும், அதில் இருந்து அலைவரிசைகளை பகிர்ந்தளிக்கும் 10 டிரான்ஸ்​பாண்டர்களையும், தாரை வார்க்கும் விவகாரத்துக்கு இஸ்ரோவின் தலைவராக இருந்த மாதவன் நாயர், அப்போது பிரதமரின் முக்கியச் செயலாளராக இருந்த டி.கே.ஏ. நாயர் ஆகிய இருவர் மட்டுமே பொறுப்பா? அவர்களைப் பின்னால் இருந்து இயக்கிய மனிதர்கள் யார் யார்? இதெல்லாம் அடுத்த கட்ட விசாரணைகளில் தெரியவரும். பிரதமரின் இன்றைய செயலாளர் சந்திரசேகருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது என்கிறார்கள். 

தற்போது, 'பி.கே.சதுர்வேதி, ரோடாம் நரசிம்மா ஆகிய இரு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று பிரதமர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த நாடும் அதன் மக்களும் - உலக நாடுகள் மத்தியில் இன்னும் எத்தனை-எந்தனை விஷயங்களுக்கெல்லம் வெட்கித் தலைகுனிய வேண்டுமோ தெரியவில்லை!



நன்றியும் மூலமும்: பல்வேறு நாளிதழ்கள் / வார இதழ்கள்.

No comments:

Post a Comment