Monday, October 17, 2011

பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலைக்கும் காங்கிரஸ் அரசாங்கம்.

பிரிட்டிஷார், 400 ஆண்டு காலம், இந்தியாவைக் கொள்ளையடித்து, வெறும் சந்தைக் களமாக மாற்றி, உள் நாட்டு தொழில்கள் அனைத்தயும் நாசம் செய்துவிட்டு, வெறும் சக்கையாக்கிவிட்டு சென்றனர்.

நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்தியாவில் கனரக தொழிற்சாலைகளை நிறுவ, தொழில் நுட்பத்திற்கும், மூலதனத்திற்கும் மேலைய நாடுகளிடம் கையேந் தினார்.

இந்தியாவில் பாம்பாட்டிகளும், பராரிகளும்தான் இருக்கின்றனர் என மேலை  நாடுகள் கைவிரித்த நிலையில், நமக்கு கை கொடுத்தது, அப்போதைய ‘சோவியத் யூனியன்’. நமது “நெய்வேலி” உட்பட ஏராளமான கனரகத்  தொழிற் சாலைகளுக்கு மூலதனமும், உபகரணங்களும், தொழில்  நுட்பமும் கொடுத்து உதவினர்.

மாபெரும் உருக்காலைகளும், அணல் மின் நிலையங்களும், அணைகளூம் உருவாயின.  இந்த பொதுத் துறை நிறுவனகளை நவீன இந்தியாவின் ‘கோயில்கள்’ என வர்ணித்தார் ஜவஹர்லால்.  பின்னர் வந்த இந்திரா காந்தியும் ஒரளவிற்கு தந்தை வழியே சென்றார். தனியார் வங்கிகள் ‘சண்டித்தனம்’ செய்தபோதும், தனியார் எண்ணை நிறுவனங்கள் முரண்டு பிடித்தபோதும் தயக்கமின்றி அந்த நிறுவனங்களை “தேசிய மயமாக்கி”  நாட்டினை உறுதியாக்கிக் காட்டினார் இந்திரா.

நமது பொதுத் துறை நிறுவனங்கள் இல்லையெனில், இந்தியா மற்றுமொரு ஏழை ஆப்பரிக்க நாடாகத்தான் இருந்திருக்கும். இவ்வாறு, ஜவஹர்லால் நேருவும், பின்னர் இந்திரா காந்தியும் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் யாவும், தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் திட்டமிட்டு சீர்குலைக்கப் படுகின்றன. சப்தமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் குரல்வளை நெரிக்கப் படுகிறது.

மீடியாக்கள் பொதுத்துறைக்கு எதிரான மலிவான பிரசாரத்தினை நெடுங்காலமாக நடத்தி வருகின்றன. இவர்களது வாதம் எப்போதும்  ஒன்றுதான். பொதுத் துறை நிறுவனகள், ‘லஞ்சம் மிகுந்தவை’, “சோம்பலானவை”, திறன் குறைந்தவை’. இக் குற்றச்சாட்டுகள் உண்மையே இல்லை என சொல்லவில்லை! இவை யாவும் சரி செய்யக் கூடியது தான். தேவை  ஒரு “பொலிடிகல் வில்” அவ்வளவுதான்.

ஆணால்,    BSNL  வருவதற்கு முன்னால் டாட்டாவும், அம்பானியும் செல்ஃபோன் கால்களுக்கு நிமிடத்திற்கு 11 ரூபாய் வசூலித்துக் கொண்டிருந்ததை, மீடியாக்கள், சௌகரியமாக மறந்து விடுவார்கள். இன்றும் கூட கிராமப் புரங்களுக்கு செல்ல மறுத்து, நகரங்களிலேயே ‘காசு’ பார்க்கும் வித்தையை காண மறுப்பார்கள்.


உண்மை என்ன?

பல்வேறு வெளி நாட்டு நிறுவனங்கள் நமது அணல் மின் நிலையங் களுக்கு ‘மிக அதிக விலையில்’ பாய்லர்களை அனுப்பிக் கொண்டி ருந்தபோது, BHEL  நமக்கு திறன் மிகு பாய்லர்களை, உள் நாட்டு தயாரிப்பாக, குறைந்த விலையில் தரவில்லை?

பழுப்பு நிலக்கரி அடுப்பெரிக்கக் கூட பயன்படாது என்று வெளி நாட்டு நிறுவனங்கள் சொன்னபோது, இதே, லிக்னைட்டைக் கொண்டு 2000 மெகா வாட்டுக்கு மேல் மின் உற்பத்தி செய்யது காட்ட வில்லை நமது NLC   நிறுவனம்?

சாமானியர்களுக்கு தனியார் வங்கிச் சேவைகள் இல்லை என்றபோது, நமது பொதுத் துறை வங்கிகள் கிராமங்களுக்குக் கூட தனது சேவையை விஸ்த்தரிக்கவில்லை?

இது போல பல நூறு உதாரணங்களைச் சொல்லலாம்!  ஒவ்வொறு பொதுத் துறைக்கும் பின்னால், தேச நலன் மண்டிக் கிடக்கிறது.

LPG என்று சொல்லப்படும், தாராளமயம், தனியார்மயம், உலக மயம் என்ற “புதிய பொருளாதார கொள்கைகள்” வந்த பின்னால், அனைத்து பொது துறை நிறுவனகளும் நமது அரசாங்கத்தால் திட்டமிட்டு அழிக்கப் படுகின்றன. அமெரிக்கர்களின் கால்களை கழுவிக் குடிக்கும் நமது பல மீடியாக்கள், இந்த நாசகார, தற்கொலைப் பாதைக்கு “ஆமாம் சாமி” போடுகின்றன.

இந்த வரிசையில் புதிதாக ஒன்றை கிளப்பி விட்டுள்ளது நமது ‘பிளானிங் கமிஷன்’.  நமது BHEL பற்றி ஒரு அறிக்கை தயார் செய்துள்ளது இந்த கமிஷன். BHEL தயார் செய்யும் கொதிகலன்கள் ‘சீன தயாரிப்பு களைவிட’ மட்டமானவையாம். திறன் குறைந்த வையாம். திட்டங்களை காலத்தே நிறைவேற்ற மாட்டார் களாம்.

இத்தகைய குற்றச்சாட்டுகளை, பல்வேறு வடிவங்களில், நமது மீடியாக்களும், வேடம் அனிந்த “அறிவு ஜீவிக்களும்” காலம் காலமாக, பொதுத் துறைக்கு எதிராக, மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. தற்போது இந்த லிஸ்ட்டில் ‘பிளானிங் கமிஷன்’. சேர்ந்து கொண்டுள்ளது.

இது குறித்து மார்க்ஸிட் எம்.பி திரு. தபான் சென் திரு. மன்மோகன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திட்டக் கமிஷன் BHEL  மீது சுமத்தியுள்ள குற்றச் சாட்டுக்கள்:

1.       BHEL – ன் மிகுமின் கொதிகலன்கள் திறன் குறைந்தவை.
2.       குறித்த நேரத்தில் ‘டெலிவரி’ செய்யப்படவில்லை.
3.       இதனைக் காட்டிலும் சீன தயாரிப்புகள் மேலானவை.

இந்த குற்றச் சாட்டுக்கள் குறித்து வியப்பு தெரிவித்த திரு. தபான் எம்.பி அவர்கள், இந்த குற்றச் சாட்டுக்கள் யாவும் தீய நோக்கம் உடையவை! BHEL –ன் இமஜை சீர்குலைக்கும் நடவடிக்கை! உண்மைக்கு மாறானது என்கிறார்.

இந்தியாவில், கடந்த இரு வருடங்களில் நிறுவப்பட்ட 40 மின் நிலையங்களில் மேற்கொள்ளப் பட்ட,  ஒரு ஆய்வு, BHEL  நிறுவனத்தால் நிறுவப்பட்ட கொதிகலன்கள் யாவும், எந்த ஒரு சர்வ தேச கொதிகலன்களுக்கும் சளைத்தது இல்லை என சான்றுரைத் துள்ளது. அது மாத்திரமில்லை BHEL வழங்கிய கொதிகலன்களில், உபயோகப் படுத்தப்படும் Secondary Fuel Oil (SFO) , சீன தயாரிப்புகளை விட 12 மடங்கு குறைவாக செலவாகிறது  எனவும் கூறியுள்ளது!

எந்த சர்வதேச அமைப்பும், உலக ரீதியில் டெண்டர்களை வெல்லும், நமது BHELL  நிறுவனத்தின் மீது எந்த வொரு குற்றச்சாட்டுக் கூறாத நிலையில், நமது பிளானிங் கமிஷன் மட்டும் இவ்வாறு ஒரு அறிக்கையினை தாயார் செய்ய வேண்டிய நிர்பந்தம் என வினவு கிறார் திரு. தபான் சென்.

உலகின் எந்த ஒரு  நிறுவனத்தின் (கொதிகலன்கள்) திறனோடு BHEL தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என சவால் விடுகிறார் இவர்.

எனவே பிரதமர் உடனடியாக தலையிட்டு, பிளானிங் கமிஷனின் இந்த அறிக்கையை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார், திரு. தபான் சென். இல்லையினில் உலக மார்க்கெட்டில் BHEL இமேஜ் பாதிக்கப்படும். 

பிளானிங் கமிஷனின் அறிக்கை தற்செயலானது என  நம்ப இயலவில்லை!

திரு. தபான் சென்னின் கடிதத்திற்கு பதில் சொல்லுவாரா நமது பிரதமர்?

கடந்த பத்து வருடங்களாக நமது அரசாங்கங்கள் கடை பிடித்துவரும் ‘புதிய பொருளாதார’ கொள்கைகள் நம்மை எங்கே கொண்டுபோய் விட்டுள்ளது என்பது தெரியுமா?

பணக்காரர்களுக்கும்-ஏழைகளுக்கும் உள்ள வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஏழைகள் மேலும் ஏழையாகவும் பணக் காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவும் மட்டுமே புதிய பொரு ளாதார கொள்கை உதவுகின்றது.

உலகெங்கும் தற்போது நடைபெறும் ‘வால் ஸ்ட்ரீட்டை நிரப்புவோம்’ போராட்டம் எதற்காக என்பதை மன்மோகன் உணருவார?

ஏர் இண்டியாவை ஒழித்தாயிற்று, பி.எஸ்.என்.எல்-ஐ ஒழிக்க அனைத்து திட்டங்களும் தயார். இன்னும் பல்வேறு நிறுவங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.

எல்லாவற்றையும் சீனாவிடமிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும்  வாங்கிக் கொள்ளலாம் என்றால் நமது இளைஞர்களுக்கு வேலை கொடுப்பது யார்? சீன தயாரிப்புகள் எத்தனை இந்திய கம்பெனிகளை ‘காலி’ செய்துவிட்டது என்பது, நமது ‘செயல்படும்’ பிரதமருக்கு தெரியுமா? இதன் மூலம் எத்தனை கோடி வேலைகளை இழந்து விட்டோம் என்பதாவது புரியுமா? இப்படி ஒரு அரசாங்கம்!  இப்படி ஒரு பிரதமர்!


இந்தியாவின் கனிசமான பகுதிகளில் ‘மாவோயிஸ்ட்’கள் செல்வாக்கு பெறுவதற்கு நிலவும் சமூக-பொருளாதார காரணங்கள் எவை என்பது திரு. மன்மோகனுக்கு புரியுமா?

‘வால் ஸ்ட்ரீட்’ நிரப்பும் போராட்டம் இந்தியாவிலும் பரவக்கூடும் என்பதும், ‘அன்னா ஹசாரேவுக்கு’ கிடைத்திட்ட ஆதரவு அலை என்பது, மக்கள் கோபம் என்ற ‘ஐஸ்பர்க்கின்' ஒரு 'டிப்’ தான் என்பதை காலத்தே புரிந்து கொண்டால் தேசத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும்  நல்லது.

No comments:

Post a Comment