Friday, January 27, 2012

வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே.. (ஒரு பக்க சிறுகதை)

நூல் விடுவதற்கு நூதனமான வழிமுறைகள் இருக்கும் போது, விபரீதமான ஒரு வழியைச் சொல்லி வைத்தான், ரகோத்து.


ரகோத்தை உங்களுக்குத் தெரியாது?

ரகோத்தமனுக்கு, ரகோத்தைத் தவிர, ‘தோசைக்கல், ‘பிஸ்கட்டு’ , ‘தவிட்டுப் பானை’, ‘பிசி நாறி என்று  பல பெயர்கள் உண்டு. அவை இடத்துக்குத் தகுந்தாற்போல மாறிக் கொண்டே இருக்கும். அவனை, எப்போது வேண்டுமானாலும், எந்தமாதிரியானலும் "வாரலாம்". கோபமே வராது. சிரித்துவிட்டுப் போய்விடுவான். இவைகளை யெல்லாம் அவன் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டான். இப்போது அதுவல்ல பிரச்சினை.

‘ஒரு மேட்டருக்கு அவனிடம் ஆலோசனை கேட்கப்போய்த் தான், மேற்கண்ட விபரீத யோசனையைத் தந்து, கூடவே அவனும் செயல் பட்டான்.

டோர் பெல் அடித்துவிட்டு, காத்திருந்தபோது உள்ளிருந்து எனது கனவுக்குயில், கனவுக்கன்னி  கூவிற்று! விஷயம் என்னவென்று, உங்களுக்கு புரிந்திருக்குமே?

“யாரு..?

“மீட்டர் ரீடிங் எடுக்க வந்திருக்கிறோம்

“எப்போதும் இருபதாம் தேதி பக்கத்தில் தானே, எடுப்பீர்கள்?

இதை ஏண்டா யோசிக்கலை, ரகோத்து?

“நான் அடுத்த வாரம் நான் லீவு. அதுதான் வேலையை முடிச்சுட்டுப் போயிடலாம்னு!

“லீவுன்னா, அடுத்தவங்க ரீடிங் எடுக்க மாட்டாங்களா? நீங்களேதான் எடுக்கனுமா?

கடன்காரா! ரகோத்தா!

“ஆபீஸில் ஆள் இல்லீங்க!

‘அப்ப நீங்க ஒரு மாசம் லீவு எடுக்கனும்னா, முந்தின மாசமே ரீடிங் எடுத்துடுவீங்களா? எங்களுக்கு அடுத்த பில்லில் பணம் சேர்ந்து வராது?

அடேய், ரகோத்தா.. உனக்கு வச்சுருக்கேன் ஆப்பு...

“அப்படியெல்லாம் செய்ய மாட்டோம்.அதுக்குன்னு ரூல்ஸ் இருக்குல்ல” 
கொஞ்சம் வழிசல் மாதிரி இருக்குதில்ல?

‘இந்த மாசம் பில் எவ்வளவு ஆயிருக்கு?

“ஆயிரத்து எழுநூறு ரூபாய் ஆகியிருக்கு!

“ஏங்க இந்த மாசம் ஏஸி கூட போடவில்லை.குளிர் நாள் தானே?  அதெப்படி அவ்வளவு ஆகும்?

‘ஏ.ஸி போடாட்டி என்ன? வாட்டர் ஹீட்டர் போட்டிருப்பீங்கள்ள?

“அமா...

பிழைத்தேன். “வாட்டர் ஹீட்டரும்" அதிகமா கரண்ட் சாப்பிடுங்க!

‘சாப்பிடுமா?“

‘சாப்பிடும்னா... கரண்ட் அதுக்கும் அதிகம் ஆகும்னு சொல்ல வந்தேன்

“கன்ஸம்ப்ஷன்னு சொல்ல மாட்டீங்களா?

‘நீங்க லாயருக்கு படிக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்!

‘இல்லை டீச்சர் டிரெய்னிங் தான் போயிட்டிருக்கேன்

‘சுதா.. யாரு வாசல்லே? உள்ளேயிருந்து ஒரு குரல். வருங்கால மாமியாரோ?

E.B  மீட்டர் ரீடிங் எடுக்கறாங்கம்மா

ஹா.. சுதாவின் அம்மாவே தான்.

“சரி வர்ரோங்க...

“இப்படி வீடு வீடா பேசிக்கிட்டே ரீடிங் எடுத்தீங்கன்னா, உங்க லீவே முடிஞ்சுடும்.”  திரும்பி உள்ளே போனாள். போகும் போது, வீசிச் சென்ற துப்பட்டா, என் முகத்தில் இயல்பாகத்தான் முகத்தில் பட்டதா?

“நீயும் உன் ஐடியாவும்... கேள்வி கேட்டே சுளுக்கெடுக்கெடுத்துட்டாடா

“அஞ்சு நிமிஷம் அவகிட்ட நின்னு பேச, சான்ஸ் செஞ்சு வச்சேனா இல்லியா? அவ பேரு, என்ன பண்றா, எல்லாம் தெரிஞ்சிகிட்டே இல்ல?

“இதுக்கப்புறம் என்னடா பண்ணலாம்?

“ம்ம்ம்.... நீ வாங்கிக் கொடுத்த R.C க்கு இவ்வளவுதான். அடுத்த ஆலோசனை, அடுத்த தட்சிணைக்கப்புறம் தான்
 
“போடாங்....

ஒரு வாரம் கழித்து, கோவிலுக்கு சென்றிருந்த போது (சாமியைப் பாக்கத்தாங்க), அம்மன் தனது இடத்தைவிட்டு இறங்கி, சௌந்தர்ய லகரியாய், தென்றல் போல, வெளிப் பிரகாரத்தில் சுற்றிக்.. வேண்டாம் இது கொஞ்சம் ஓவர்... எனக்கே சகிக்கலை. 

வெளிப்பிரகாரத்தில் சுதாவைப் பார்த்தேன்.

‘நீங்களா?  அன்னிக்கு எல்லார் வீட்டிலேயும் ரீடிங் எடுத்து முடிச்சுட்டீங்களா?

எங்கடா ஒழிஞ்சு போனே ரகோத்தா?

“ம்.. எடுத்து முடிச்சுட்டேமே? ஏன் கேக்கறீங்க

“எங்க அப்பா விசாரிச்சுட்டாரு.. ரீடிங்குக்கு இன்னும் ஆள் அனுப்பவே இல்லியாம்

“மன்னார் அன்ட் கம்பெணி“ மாட்டிக்கிட்டாங்களா.?

“அது எங்கூட வந்தானே ஒருத்தன், அவன் குடுத்த ஐடியாங்க இது..!

“அப்ப, உங்க ஃபிரண்டுக்குத்தான் துணை வந்தீங்களா?

ஐயோ.. இதென்ன கதையே உல்டாவாகுது?

இல்லீங்க..எனக்குத்தான் உங்ககிட்ட பேசனும்னு ரொம்ப நாளா ஆசை. நீங்க என்னன்னா ரோட்டில திரும்பிக் கூட பாக்க மாட்டேங்கிறீங்க.. அதான், அன்னிக்கு ரீடிங் எடுக்கறாப்புல வந்தேன்.

“ரொம்ப அமெச்சூர்தனமா இருக்கு

சிரித்தேன்.. தோம்

அதன் பிறகு ரகோத்தின் உதவி தேவைப் படவில்லை.

அடுத்த ஒரு  வருடம், உல்லாசப் பறவைகள். தியேட்டர், பீச்.. இத்தியாதி.. இத்தியாதி. கடலைதான்.

அவளுக்கு டிரெயினிங் முடிந்து, அரசுப் பள்ளியிலேயே வேலை கிடைத்து விட்டது.

எனது “பி.ஸி.ஏ வுக்கு என்ன கிடைக்கும்? ஒருவழியாக ரகோத்தின் உறவினர் மூலம், பயிற்சிக்குப்பின்,  ஒரு மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் சென்டரில் வேலை கிடைத்தது. சுளையா இருவதாயிரம் பாக்க முடிஞ்சது.  எல்லாம் சுகமாகப் போய்க் கொண்டிருந்த வேளையில், விஷயம் எங்களது பெற்றோருக்கு தெரிந்து விட்டது. சினிமா மாதிரி, பூகம்பம் எல்லாம் வெடிக்கவில்லை.

சுதாவின் அப்பாதான் வந்து என் அப்பாவிடம் பேசினார்.

“சரி.. காலம் மாறிப் போயிடிச்சு.. பசங்களுக்கு பிடிச்சிருந்தா நாம ஏன் குறுக்கே நிக்கனும்னு எல்லாம் சுலபமா முடிச்சுட்டாங்க.

நாள் குறிக்க வேண்டியது தான் பாக்கி.

இந்த நேரத்திலயா அமரிக்காவில ‘ரெசஷன் வந்து சேரனும்?

‘பெஞ்சில உக்காத்தி வச்சுட்டாங்க..

ரெண்டு மாசமாயிடுச்சு.. கூப்பிடவும் இல்லை.. சம்பளமும் இல்லை..

சுதா வந்தாள்.  ‘ஏய்.. உனக்கு வேலையா போயிடிச்சு? 

‘ஆமாம் சுதா.. ‘அதனால் என்ன?  வேற வேலை கிடக்காமலா போயிடும்? வருத்தப்படாதே!

“சீக்கிரமா பார்..

“ம்ம்ம்ம்...

நாள்தான் ஓடியது..  உருப்படியா வேலை ஏதும் சிக்கலை.

ஒரு நாள் சுதாவின் அப்பா வந்தார்.

இத பார் தம்பி.. நாங்க சுதாவுக்கு வேற இடத்தில, மாப்பிள்ளை பாக்கறோம். கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான்.  உங்ககிட்ட சொல்லிடனும்னு தான் வந்திருக்கேன்.

“உங்க புத்திய காட்டிட்டிங்கள்ள?  நீங்க நெனச்சா அறுத்துவிட இது என்ன கிராமத்து பஞ்சாயத்துன்னு நெனச்சுக்கிட்டீங்களா? எப்படி இந்த கல்யாணத்தை நட்த்துறீங்கன்னு பாக்கறேன். உங்க கண்ணுக்கு முன்னாடியே நானும் சுதாவும் கல்யாணம் கட்டிக்கறோமா இல்லியான்னு பாருங்க!

‘இதோ பார், உன்னை வேண்டாம்னு சொன்னது நாங்களில்லை.. சுதாதான்; தெரிஞ்சுக்கோ.  உங்க விஷயத்தைப் பத்தி மாப்பிள்ளைப் பையன் கிட்ட சொல்லிட்டோம்.  விடலைப் பருவத்தில வந்தது. விட்டுத் தள்ளுங்கன்னு  அவரே சொல்லிட்டாரு..

“அடேய்.ரகோத்தமா.. எங்கடா இருகே?   RC வாங்கித்தரேண்டா.. மனசுக்கு ஆறுதலா ஏதாவது எவனாவது ஏதாவது சொல்லுங்கடா !

1 comment:

  1. கதை ரொம்ப நல்லாயிருக்கு. பதிவிற்கு நன்றி.

    ReplyDelete