Saturday, March 7, 2015

ஒரு ஊரே திரண்டு....



ஒரு ஊரே திரண்டுவந்து, சிறைக்கதவை உடைக்கிறது என்றால், அதன் பின்னனியில், மக்களுக்கு இருக்கும் ஆத்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். சிறைக் கதவை உடைத்தால், துப்பாக்கி சூடு வரை போகலாம் என்று தெரியாதவர்களா அவர்கள்? துனிந்து செய்கிறார்கள் என்றால், அந்தப் பெண்ணின் மீது, ஏவப்பட்ட வன்முறை குறித்து, மக்கள் கொண்டிருக்கும் ஆத்திரத்தை உணரவேண்டும்.

குழு உணர்வுகள் மேலோங்கியிருக்கும் அம்மாநிலத்தில் நடந்திருப்பதால், பத்திரிக்கைச் செய்தியினை முழுமையாக நம்ப முடியவில்லை.

மேலும், மக்கள் கோர்ட்களின் மீதும், காவல் துறையினர் மீதும் கொண்டிருக்கும் தீராத அவ நம்பிக்கையையும் இது கோடி காட்டுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். வழக்குகள் யாவும் ஒரு வருடத்திற்குள்  தீர்த்தாக வேண்டும் என்ற நடைமுறை வந்தாலொழிய, மக்கள் நீதி மன்றங்களின் மீது வெறுப்புக் கொள்வதைத் தவிர்க்க இயலாது.  வழக்கு நடந்து முடிவதற்குள், குற்றம் சாட்டப்பட்டவரும், வழக்குத் தொடுத்தவருமே, காலமாகிவிடும் விந்தை இந்த நாட்டில்தான்.  இது தீப்பொறியாக இந்தியா முழுவதும் பரவாமல் பார்த்துக் கொள்வது, ஆட்சியாளர்கள், கோர்ட் மற்றும் காவல்துறையின் கையில் இருக்கிறது.

வெறி நாய்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது.  இழுத்துப் போர்த்திக் கொண்டு நடக்க வேண்டும் என அறிவுரை கூறுவதெல்லாம், அபத்தத்தின் உச்சம். ஒரு பெண்,  நவீன உடையனிந்து சாலையில் சென்றால், கற்பழித்து விடுவார்களாமா? இந்த அறிவுரையைக் கேட்டு சலித்துவிட்டது. அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு இப்படி நடந்தாலும் இதே அறிவுரையைச் சொல்வார்களா?

நாம் எப்பொழுதும் போல, ஆரியன், திராவிடர், கல் தோன்றி மண்தோன்றா, அகண்ட தமிழகம், ஜாதிச் சண்டைகள், ஈழம் ஆகியவற்றை நரம்பு புடைக்கப் பேசி, மக்களை வெறியேற்றிக் கொண்டிருப்போம்.

சப்தமே காட்டாமல், LPG  எனப்படும், “தாராளமயம்-உலகமயம்-தனியார்மயம்” – நமது கலாச்சாரத்தை, கரையான் மரத்தை ஓசையின்றி சாப்பிடிவது போல, முற்றாக சீரழிப்பதை கண்டும் காணாமல், மைக் முன்னே வீராவேசம் கொண்டு முழங்கிக் கொண்டிருக்கலாம்.

1 comment:

  1. வணக்கம்.
    தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_7.html

    ReplyDelete