Saturday, May 2, 2015

போக்குவரத்து சட்ட மசோதா - 2014

எனது உறவினர் ஒருவர் இருந்தார். தன்னைக் குடும்பத்தில் எவரும் மதிப்பதில்லை என ஆதங்கம். குடும்பத்தாருக்கோ, அவருக்கு எந்த சாமர்த்தியமும் இல்லை. ஆபீஸை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது என்ற அபிப்ராயத்தைக் கொண்டவர்கள்.
 ஒரு நாள் தன்னை நிரூபிக்க வேண்டும் என ஆர்வம் மேலிட, அப்போதைய மூர் மார்க்கட்டுப் போய், மனைவிக்கு மலிவாக (Cheap) ஒரு செருப்பு வாங்கிவந்தார்.
வீட்டில் உள்ளோர் பிரமையுற்றனர். இந்த மனிதன் தனியாக கடைக்குப் போய், மனைவியின் கால் அளவு சொல்லி செருப்பு வாங்கிவருவதாவது? அதுவும் இவ்வளவு விலை குறைவாக?

குடும்பத்தின் குதூகலம் சில நிமிடங்களே! ஏனெனில் அவர் வாங்கி வந்தது இரண்டுமே வலது காலுக்
கான செருப்பு.  
“உங்க சாமர்த்தியம் மூர்மார்கட் காரனுக்கும் தெரிஞ்சு போச்சா? எனக்கு வேணுமா-வேண்டாமான்னும் தெரியாது, எப்படி வாங்கனும்னும் தெரியாது.. சை...” என்றார் பத்தினி.
குடும்ப விவகாரங்களில் அவ்வளவு “நெருக்கம், விபரம்” அந்த மனிதருக்கு!
நம்ம அரசியல்வாதிகளும் கிட்டத்தட்ட  அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு, தேர்தல் சமயத்தில், வாக்காளர்களுக்கு பணமும் சாராயமும் தருவதோடு சரி. அதன் பிறகு அவர்களது பிரச்சினைதான் என்ன? என்னதான் அவர்களுக்கு வேண்டும்? ஒன்றும் தெரியாது.
மாடுமேய்க்கும் சிறுவன் பள்ளிக்கு போகாதது, சாப்பாடு இல்லாததினால் என்பதை பார்த்த மாத்திரத்தில் கண்டு கொண்ட காமராஜர் கொண்டு வந்ததுதானே ‘மதிய உணவுத் திட்டம்?’ 
‘எம்.ஜி.ஆரின்’ பள்ளிப் பிள்ளைகளுக்கு செருப்பு வழங்கும் திட்டம் கண்டு வியந்திருக்கிறேன். பள்ளி செல்லும் பிள்ளைகளின் கால்களைக் கவணித்திருந்தால் ஒழிய இப்படி எவருக்கும் தோன்றவே தோன்றாது.
தற்போதைய அரசியல் வாதிகளுக்கு ‘பாக்கட்டை நிரப்பிக் கொள்ளவும், இடைவிடாது அள்ளிக் கொட்டிக்கொள்ளவும் மட்டும்தான் தெரியும்.
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாகனச் சட்ட மசோதாவும் இந்த வகையானதுதான். விந்தையான, விசித்திரமான மசோதா. அவர்களுக்கு நாட்டின் நிலவரம் ஏதாவது தெரியுமா, மக்கள் எப்படி பிழைக்கிறார்கள் என்பது புரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது.
அதன் ஷரத்துக்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
மக்களோடு என்றைக்குமே நெருங்காத ‘IAS’  அதிகாரவர்க்கம் ஏ.ஸி ரூமில் உட்கார்ந்து கொண்டு, வியாக்காணம் சொல்லும் மசோதா அது.
சாலையோர மெக்கானிக்குகளுக்கு வேட்டு வைக்கும் மசோதா..
டிரைவிங் லைசென்ஸுக்கு தனியார்களை ஆராதிக்கும் மசோதா..
நகரெங்கும் விரவிக் கிடக்கும் ‘ஆட்டோமொபைல்’ டீலர்களுக்கு வேட்டுவைக்கும் மசோதா. இன்னும் பல ஆபத்துக்கள் உள்ளன…
இதைவிட ‘அப்பட்டமாக’ கார்பொரேட் கம்பெனிகளுக்கு ‘வால்பிடிக்கும்’ மசோதாவினை பார்த்ததில்லை.
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், இதெல்லாம் நல்லதுதான் எனத் தோன்றும். ஆனால் இந்தியாவைப் புரிந்து கொண்டவர்கள், அதன் மக்களை அறிந்தவர்கள், அவர்களது வாழ்வாதரத்தை அறிந்தவர்கள், சுருக்கமாக்ச் சொன்னால் ‘மக்களோடு இருப்பவர்கள்’ இதன் ஆபத்தையும், அபத்தத்தையும் உணர்வார்கள்.

கோட்டு-சூட்டு மாமாக்கள் எதாவது ஒரு மசோதாவை ரெடி செய்வார்கள்தான். அரசியல்வாதிகள் அல்லவா அதை பிரித்துணர வேண்டும்?
கார், லாரி, மினிடோர், டெம்போ, டாக்ஸி போன்ற வாகனங்களின் ஓட்டுனர்கள் மட்டுமல்ல, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் வரை எல்லோரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.

புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற இருப்பவர்களுக்கு 9 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். அதன் பின்னர் 3 மாதங்கள் சோதனை காலம். அதன் பிறகுதான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

சாலை விதிகளை மீறினால், அதற்கான தண்டனைகள் கடுமையானவை. எடுத்துக்காட்டாக:

ஒருமுறை சாலைவிதியை மீறியதாக குற்றஞ்சாட்டப் பட்டவர் தனது சொந்த செலவில் இரண்டு தமிழ் செய்தித் தாள்கள், ஒரு ஆங்கில செய்தித்தாளில், “நான் தவறு செய்தவன்என்று சொந்த செலவில் விளம்பரம் செய்ய வேண்டும்.

சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தினால், அந்த ஓட்டுனர் ரூ 50,000 அபராதம் கட்ட வேண்டும். ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இவைமட்டுமல்ல, சாதாரண தவறுகளுக்கு கூட தண்டனைத் தொகை தற்போதைய தொகையைவிட 10 முதல் 50 மடங்கு அதிகம்.

தற்போது வைத்துள்ள ஓட்டுனர் உரிமங்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிடும்.

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை இனி அரசு நடத்தாது. இதனை கண்காணிப்பதையும் ஆர்.டி.ஓ. செய்ய மாட்டார். அதாவது ஆர்.டி.ஓ. அலுவலகமே இனி இருக்காது. எப்படி?

இச்சட்டப்படி, ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி என்பது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டும். அங்கு மருத்துவ சோதனைகள், பணிமனை (ஒர்க் சாப்) போன்றவை இருக்க வேண்டும். பயிற்சியும் அங்கேதான் தரவேண்டும். இவ்வளவு பெரிய அளவில் யார் நடத்துவது என சிந்திக்கிறீர்களா. ஆமாம், தற்போது இருக்கும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை மூடிவிட வேண்டியதுதான். ஏனென்றால், வாகன தயாரிப்பு நிறுவனங்களே (கார்ப்பரேட் கம்பெனிகள்) இந்த ஓட்டுனர் பயிற்சியை அளிக்கும்.

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மட்டுமல்ல ஓட்டுனர் உரிமத்தையும் அவர்கள் தான் வழங்குவார்கள்.

மசோதாவின் ஷரத்துக்கள் உண்மையாக இருக்குமானால், அந்த வடிவிலேயோ ‘மசோதா நிறைவேறினால்’, அப்பட்டமாக, “பெரு முதலாளிகளுக்கான” அரசாகவே “பி.ஜே.பி”- ஐ கருத வேண்டுமே தவிர, மக்களுக்கான அரசாக கருத இடம் இல்லை.
‘சுதேசி’ கோஷம் ஏமாற்று வேலையா? பி.ஜெ.பி யின் அரசியல் நடவடிக்கைகளைகளுக்கு ஆர்.எஸ்.எஸ், ஸ்வதேஷி ஜாக்ரன் மன்ச் போன்றவை இந்த மசோதாவுக்கு ஆதரவளிக் கின்றனவா?
இந்த அபத்த நடவடிக்கைகளுக்கு ‘செக்’ வைக்கப் போகிறார்களா இல்லையா?
இப்படியே Pro-Monopoly, Pro-Corporate அக செயலாற்று வார்களேயானல், மக்கள் மனதிலிருந்தும், அரியணையிலிருந்தும் அகற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை

1 comment:

  1. அவன் கொள்ளை அடிக்கரானேன்னு இவனை கொண்டுவந்தா இவன் உயிரோடே கொளுத்திடுவான் போல இருக்கு. எரியற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு பாக்கறதே நமக்கு பொழப்பா போச்சு !

    ReplyDelete