Thursday, May 7, 2015

டி வி. தமிழ்

தமிழ் தொலைக் காட்சிகளின் உச்சரிப்பு இம்சையினாலேயே, டி.வி பார்ப்பதை நிறுத்தி விட்டேன். ஒரு பயலுக்கும் / பயலிக்கும் “ண-ந-ன”, “ழ-ள-ல”, “ற,ர” வித்தியாசம் தெரியாது. “மேடையிள் இறுக்கும் பளம்பெரும் தளைவர்கலே, நண்பர்கலே” என்றால் சகித்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் செரிவாக தமிழ் உச்சரிக்கத் தெரியாமல் இருந்தால்தான் தொலைக்காட்சிக்குள் நுழையலாம் போல. கேனத்தனமாக உச்சரிக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதி போலும்.

அதுவும் சினிமா சம்பந்தப்பட்ட நடிக-நடிகைகள், டெக்னீஷியன்கள் இருக்கிறார்களே, அவர்கள் வாயைத் திறந்தால் எரிச்சல் வருகிறது. தெளிவாகப் பேசத்தெரியாத, குளறிக் குதறும் கொட்டும் கூட்டம்.  

அத்தி பூத்தாற்போல கமல், ப்ரகாஷ்ராஜ் போன்றோர் தெளிவாகப் பேசுவார்கள்.

உயர்தட்டு மாமிக்களுக்கு ‘ட்’ வரவே வராதா? நாக்கை மடக்கி மேலன்னத்தை தொட்டால்தானே ‘ட்’? இந்த நங்கைகளுக்கு ‘ட்’ என்றால் நாக்கின் நுனி மேல் பல்லைத் தொட்டாலே போதும். அவர்களுக்கு ‘டமில்’ பேசுவது அவ்வளவு கஷ்டமாம்.

உச்சரிப்பு எரிச்சலடைய வைக்கிறது என்றால், இடையிடையே அவர்கள் பேசும் ‘அது வந்து—அது வந்து’ இருக்கிறதே, புத்தருக்கும் ஆத்திரம் வந்துவிடும்.

சரிதான் என சலிப்புற்று, ஆங்கில சேனல்களுக்குத் தாவினால், அவர்கள், நேரடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான அக்ஸென்டோடு வாசிப்பார்கள்.  நாமும் கையில் ந்யூஸ் ஸ்கிரிப்டை வைத்துக் கொண்டால்தான் புரியும் போல.

முன்பு ‘மினு’ என்று ஒருவர் தூர்தர்ஷனில் ஆங்கிலச் செய்தி வாசிப்பார். தெள்ளத் தெளிவாக இருக்கும். இப்போது இருக்கும் தலைவிரி கோல அம்மனிக்கள் வாசிக்கும் செய்திகளைக் கொண்டு , ‘தோராயமா’ இதுதான் செய்தி எனப் புரிஞ்சுக்கலாம்.

சரோஜ் நாராயண் சுவாமிக்களின் காலம் இனி வரவே வராதா?

ஒரு சந்தேகம். டி.வி ஸ்க்ரீன்களை  ஏன் இப்படி ‘குதறி’ வைக்கிறார்கள்? 
கீழே குறைந்த பட்சமாக,  கீழே இரண்டு பட்டைகளில் ஏதாவது ஸ்க்ரொல் ஆகிக் கொண்டே இருக்கும். அப்புறம் டி.வி, மற்றும் டிஷ் ஆப்ரேட்டர்களின் லோகோ. இதே கேபிளாக இருந்தால் அவர்கள் செய்யும் ஸ்க்ரொல் வேறு. இந்த குளறுபடி போதாது என்று, ஏழுபெர் ஸ்ப்ளிட் ஸ்க்ரீனில் வருவார்கள். ஸ்க்ரீன் பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற்போல இருக்கும்.  தெளிவான, குழப்பமற்ற ஸ்க்ரீன் தான் பார்க்கவைக்கும் என்பது கூடவா தெரியாது?

இன்னொரு இம்சை, டி.விக் காரர்களின் ‘லோகோ’ வருவதற்கு முன்னால் அவர்கள் செய்யும் அலப்பரை. மலை உடைந்து,  கடல் பொங்கி, உலகம் சுழன்று-சுழன்று, எரிமலை பொங்கி, எழுத்துக்கள் முன்னும் பின்னும் டான்ஸ் ஆடி, ‘யப்பா’ போதும்டா இது ‘சன்’ னென்றோ, ‘ஜெயா’ வென்றோ புரிந்து விட்டதப்பா  என அலற வேண்டும் போலிருக்கும்.

ந்யூஸ் வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அது ‘ந்யூஸ்’ என்பதற்கு ஒரு ஒரு நிமிஷத்திற்கு, அதே போல உலகம் சுழலும் ‘ஃப்ளேஷ்”

ந்யூஸுக்குள்ளேயே, உலகச்செய்திகளுக்கு ஒரு ஃப்ளேஷ், உள்ளூர் செய்திகளுக்கு ஒரு ஃப்ளேஷ், விளையாட்டு செய்திகளுக்கு ஒரு ஃப்ளேஷ்.
  
விளம்பரம்:
அவர்களது நோக்கம், இந்த பொருளைப் பற்றி  தெரியாமலிருப்பது வாங்காலிருப்பது அவமானம், அசிங்கம் என்று  நம்மை ஏற்றுக் கொள்ள வைப்பது. கீழ்மட்டத்து(!) ஆட்கள் (!) கூடத் தெரிந்து வைத்யதிருக்கிறார்கள்- நீயும் இருக்கியே தெண்டமா என்ற கருத்தை, நமக்குள்  நேரடையாகவோ மறைமுகமாகவோ தினிப்பதே.   நம்மைக் கிண்டலடித்து நம்மிடமே விற்கிறார்கள்.

முன்பு ஓரியன்ட் ஃபேனுக்கு வரும் “உங்களுக்கு PSPO என்றால் தெரியாதா?”, வீடுகூட்டும் வேலைகாரி இங்கிலீஷ் பேசுவது, இப்போது ஆட்டோக்கார்ர் ஃப்ளிப்கார்ட் ஆப்ஸ் போன்றவை இந்த ‘கேட்டகிரியில்’ சேர்த்தி.  

விளம்பரங்களை கவனிக்கும் போது, அதை ஒன்றிப் பார்க்காமல், ஊன்றிப் பார்த்தால், எப்படியெல்லாம் நம்மை ஜல்லியடிக்கிறார்கள் என்று புரியும். 
போதும்டா சாமி.. இனி டி.வி பாப்பீங்க.. .

No comments:

Post a Comment