Sunday, December 6, 2015

கடலூர்

நான் கடலூரைச் சார்ந்தவன். கடலூர் இன்னொமொரு இன்னலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுனாமி, தானே புயல் என பலவற்றையும் தாங்கிய கடலூர் மற்றும் ஒரு பெருவெள்ளத்தையும் தாங்கும் நிர்பந்தம். அரசு இயந்திரம் தன் முழுவேகத்தில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இயற்கையின் சக்தி எல்லாவற்றையும் மீறியதல்லவா?

பல்வேறு உதவிக் குழுக்கள் விளம்பரமின்றி ஆதரவுக்கரத்தை நீட்டியிருக்கின்றன. அரசாங்கமும் பெரிய அளவில் முகாம்களை நிறுவியிருக்கிறது. பேரிடர் என வரும் பொழுது, எல்லா மாச்சர்யங்களையும் மீறி, உதவிகள் குவிகின்றன. குறைகளை பலர் சொன்னாலும், பல்வேறு குணாதிசியங்கள் கொண்ட இச் சமூகத்தில், இதைவிட சிறப்பாக பொருட்களை வினியோகித்திருக்க முடியாதுதான்.

ஆனால், அடிப்படையான பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதுதான், பேரிடர்களை எந்த அளவிற்கு எதிர்பார்த்திருக் கிறோம், அதற்கான தயாரிப்புகளில் எந்த அளவிற்கு ஈடுபட்டிருந்தோம் என்பதுதான்.

இங்கே எந்த ஒரு தனிப்பட்ட கட்சியையும் குறை சொல்லவில்லை. இப்படி பேரிடர் வந்தால், இப்படிச் செயல்பட வேண்டும் என்ற ப்ளூபிரிண்ட் ஏதாவது இருக்கிறதா என்றால், துரதிர்ஷடவசமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ராணுவத்தில் ஒன்று சொல்வார்கள், ‘அமைதிக் காலத்தில் செலவாகும் வியர்வை, போர்க்காலத்தில், போர்க்களத்தில் விரயமாகும் இரத்தத்தின் அளவைக் குறைக்கும்’ என. அதாவது அந்த அளவிற்கு தயாரிப்பும், தயார் நிலையும் தேவை என்கிறார்கள்.

கடலூர், புவியியல்படி, அதிக அனுகூலங்களைக் கொண்டது. இது மிகப் பெரிய நகரும் அல்ல. நகரினுள்ளேயே இரு பெரும் ஆறுகள் ஓடுகின்றன. தென்பெண்ணை மற்றும் கெடிலம் (கருட நதி). இது தவிர நிறைய உப்பனாறுகள். மிக அருகில் கடல். இவ்வளவையும் வைத்துக் கொண்டு வெள்ள நீர் வடியவில்லை என்றால் கோளாறு யாரிடம்?

பொதுவாக, கடலூரை நெல்லிக்குப்பம் சாலைக்கு இந்தப் பக்கம், கெடிலம் ஆற்றுக்கு அந்தப்பக்கம், முது நகர் என நீர்வாட்டதிற்கு ஏற்றாற்போல மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். அந்தந்தப் பகுதிகளில் சேரும் வெள்ள நீரை அந்தப் பகுதி ஆற்றில் சேருமாறு செய்வது எளிது.

எங்கே வெட்டினால், சுலபமாக வெள்ளம் வடியும் என்ற நில அமைப்பைப் பற்றிய ‘க்ளூ’ கூட இல்லாமல் இருக்கிறார்கள்.

எக்காலத்திலும் கடலூர் இப்படித்தான் இருந்ததா என்றால், அப்படி இல்லை.. நகரில் இருந்த பல்வேறு குளங்களைக் காணோம். குறுக்கும் நெடுக்குமாக ஓடிய வடிகால்களையும், கால்வாய்களைக் காணோம். எல்லாவற்றையும் ப்ளாட் போட்டாகிவிட்டது அல்லது ஆக்கிரமிப்பில் உள்ளது.

எங்கே கோரிக்கையும் மறியலும் நிகழ்கிறதோ அங்கே ‘பொர்க்லைன்’ கொண்டுவந்து நோண்டிவிட்டால், அது பிரச்சினையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றல் செய்கிறதே தவிர, அடிப்படையான விஷயம் அப்படியேதான் இருக்கிறது. ஒரு நகர்வாசிகள் அடைந்த இன்னலை மற்றொரு நகர்வாசிகள் அனுபவிப்பார்கள் அவ்வளவே.

இவைகளுக்கு அரசு இயந்திரத்தை குறை கூறிப் பயனில்லை. தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் எந்த பேரிடரையும் கற்பனைகூட செய்திருக்கவில்லை அல்லது நிகழ்ந்த பேரிடர்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

நடந்த வெள்ளப் பெருக்கு, நமது பலவீனங்களை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. வெள்ள நீர், தனது பாதை எதுவென தீர்க்கமாகச் சொல்லிவிட்டது. அதற்கேற்றாற்போல அடுத்த வெள்ளக் காலத்திற்குள்ளாக சுதாகரித்துக் கொள்வோமா, உடணடியாகத் திட்டங்களைத் தயாரித்துக் கொள்வோமா இல்லை, இந்த சீசன் முடிந்ததும் எல்லாவற்றையும் மறந்து ‘வழக்கம்’ போல பணிகளை மேற்கொள்ளப் போகிறோமா என்பதை ஆட்சியாளர்கள் தீர்மாணிக்க வேண்டும்.

வடிகால்கால்களை நிர்மாணிக்காவிட்டால், லேயவுட்களை அப்ரூவ் செய்யும் பொழுது, தனித்தனி தீவுகளாக இல்லாமல், மற்ற நகர்களுக்கு இணைப்பு இருக்கிறதா, வடிகால்களுக்கு வசதி இருக்கிறதா, முக்கிய சாலையிலிருந்து அந்த நகர் எந்த அளவு பள்ளத்தில் இருக்கிறது போன்ற அடிப்படையான விஷயங்களை கணக்கில் கொள்ளாவிட்டால், இது தொடர்கதைதான்.

தயவுதாட்சணமின்றி, அரசியல் நோக்கின்றி, ஓட்டுக்களை கணக்கில் கொள்ளாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அவர்களுக்கு மாற்று குடியிருப்பு என்பது தனி விஷயம். ஆக்கிரமிப்பு இல்லையென்றால், இந்த அளவிற்கு நிலைமை மோசமாயிருக்காது.

செய்வார்களா?



6 comments:

  1. சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான கட்டுரை. இயற்கை நமக்கு கற்பித்த பெரிய பாடம் இது. இதிலிருந்து என்ன கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பது மிக முக்கியம்!

    ReplyDelete
  2. நீர் தனது பாதையை நிர்தாட்சண்யமாகச் சொல்லி விட்டது. தொலைநோக்கோடு செயல்பட வேண்டும், ஓட்டுகளைப் பற்றிக் கவலைப் படாமல். கோவை 'சிறுதுளி' போன்று மக்கள் இயக்கம் உருவாக வேண்டும். பதிவு அருமை

    ReplyDelete
  3. நீர் தனது பாதையை நிர்தாட்சண்யமாகச் சொல்லி விட்டது. தொலைநோக்கோடு செயல்பட வேண்டும், ஓட்டுகளைப் பற்றிக் கவலைப் படாமல். கோவை 'சிறுதுளி' போன்று மக்கள் இயக்கம் உருவாக வேண்டும். பதிவு அருமை

    ReplyDelete