Saturday, January 2, 2016

பதான்கோட்

பாகிஸ்தான் என்ற நாடு, ராணுவத்தாலும் தீவீரவாதிகளாலும், உலக நாடுகளின் கண்டனப் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக போட்டுக்கொண்ட பொம்மை ‘ஜன நாயக’ அரசாங்கத்தாலும் ஆன நாடு.

அந்த நாட்டின் அதிகாரம் ‘ராணுவத்தின்’ கையில். ஐ.எஸ்.ஐ மற்றும் ராணுவமும் ஒன்றிற்குள் ஒன்று.  

இந்தியாவுடன் நேரடி யுத்தம் சாத்தியம் இல்லை என்ற காரணத்தால், பயங்கரவாதிகளை ஊக்குவித்து மறைமுக போரில் ஈடுபடுவது, பாக் ராணுவத்தின் வெகுகால நடைமுறை.  முன்பு பம்பாய். இப்போது பதான்கோட்.

அந்த நாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில், அவர்கள் ராணுவம் இல்லை. மாறாக ராணுவத்தின் பிடியில் அரசாங்கம்.

பதான்கோட்டில் நடந்த தாக்குதலை பாகிஸ்தான் அரசாங்கம் கண்டித்துள்ளது.  மிகுந்த எச்சரிக்கையுடன் வார்த்தைகள் தொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லைப் பயன் படுத்தி யிருக்கிறார்கள். ஆனால், தாக்குதலுக்குப்பின்னால் ஐ.எஸ்.ஐ இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அது இருந்தாலே, பாக்கின் ராணுவத்தின் கை இருந்தே தீரும்.

அமைதிக்கான முயற்சி எடுக்கப்படும் போதெல்லாம், அதைச் சீர்குலைக்க, இம்மாதிரியான சதிவேலைகளில் ஈடுபடுவது, பாக்-ராணுவத்தின் குணம்.

திரு மோடி அவர்கள், பாக் அரசாங்கத்திடம் கைகுலுக்கும்போதே, இந்த தாக்குதல் தீர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பயங்கரவாதம், அமைதிப் பேச்சுக்கான நமது அமைதித் ‘திட்டத்தை’ குலைத்துவிட அனுமதிக்க முடியாது.

நமது பாதுகாப்புப் படைகளின் நவீனமயமும், எப்பொழுதும் உஷார் நிலையிலும்-தயார் நிலையிலும் இருப்பதும், இந்தியாவிற்குள் நுழைந்தால் உயிருடன் திரும்ப இயலாது என்ற நிலைமையை உருவாக்குவதும் தான், அவர்களுக்கு நாம் தரக்கூடிய  ஒரே பதில்.

நமது வீரர்கள் தீரத்துடன் போராடி அவர்களை வீழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் போராட்ட்த்தில் நமது தரப்பில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அவர்களுக்கு அகில இந்தியாவும் மரியாதையும் அஞ்சலியும் செலுத்துகிறது.

ஆனாலும்,  நமது இடத்திற்கு, அதுவும் ராணுவ கேந்திரத்திற்கே, விமானப்படை-தரைப்படை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு எப்படி அவர்களால் வர முடிந்தது? அவ்வளவு ஆர்.டி.எக்ஸுடன்?

நமது உளவு அமைப்பும், பிற அமைப்புகளும் தீவீர விசாரணை நடத்துவார்கள்.

பயங்கரவாதிகள், இனி இந்திய மண்ணில் காலெடுத்து வைக்கும் போதெல்லாம், அவர்களால் நமது ஒரு ஜவானையும் சுட்டுவிடமுடியாது, மாறாக அவர்களே பலியாக வேண்டியிருக்கும் என்ற நிலை உருவாக வேண்டும்.

ஏனெனில், எந்த ஒரு சிப்பாயையும்  அவ்வளவு சுலபமாக  இழக்க முடியாது.

No comments:

Post a Comment