Monday, April 11, 2016

வெடி

சில வருடங்களுக்கு முன், திருவனந்தபுரத்தில் உள்ள,  என் உறவினர் வீட்டிற்கு முதன் முறையாகச் சென்றேன்.  அவர், இந்த ஊரில் உள்ள, ஆட்டுக்கால் பகவதியம்மன் கோயில் வெகு விசேடமானது, வா போய்வரலாம் என அழைத்தார். இந்த அழைப்பை மறுத்துப் பேச காரணம் ஒன்றுமில்லை என்பதால், ஏற்றுக் கொண்டேன். ஆற்றுக்கால் அம்மன், ஆட்டுக்கால் அம்மன் என பலவிதங்களில் அழைக்கப்படும்,  அந்த ‘பகவதியம்மன் கோயில்’ ஊரின் நடுவிலேயே இருக்கும். மின்னும் கோயில்.

கோவிலில், செருப்புகளை பாதுகாக்கும் இடம்  நாடி, கண்கள் அலைந்து கொண்டிருக்கும் பொழுது, ஆளைத் தூக்கிவாரிப் போடவைக்கும் ‘படீர்’ சப்தம் ஒன்று கேட்டது. உண்மையிலேயே சற்றும் எதிர்பாராத, காதைச் செவிடாக்கும் அந்த பெரும் சப்தம், ஒரு கணம் என் இதயத்தை நிறுத்தி இயங்கச் செய்துவிட்டது.  ஏதேனும் வெடிவிபத்தா, வாகனங்கள் மோதிக்கொண்டுவிட்டனவா? இது என்ன அதிபயங்கர சப்தம்?  என பீதியடைந்து திக் பிரமையுடன் சுற்றும் முற்றும்  நோக்க, கூட வந்த என் உறவினர், ‘பயப்படாதே.. இது வெடி வழிபாடு... வெடிவெடிக்கிறார்கள்’ என்றார்.

அப்பொழுதுதான் கவனித்தேன். ஒரு இடத்தில், ‘வெடிவழி பாடு’ என்று எழுதி, கட்டன விபரங்களும் எழுதியிருந்தனர்.  பத்து ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை  வழிபாட்டுக் கட்டனம் இருந்தது.  பணத்தைக் கட்டிவிட்டால், நாம் கட்டும் பணத்திற்கு ஏற்ப ‘வெடி’ வெடிக்கப்படும். பணம் கூடக்கூட சப்தத்தின் அளவும், வெடிகளின் எண்ணிக்கையும் கூடும். இங்கு நாம் கோவில்களில் அர்ச்சனை செய்வது போல, அங்கு வெடியும் ஒரு சடங்கு.

ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பொழுது, மலையில் ‘வெடி வழிபாடு’ என்று எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவ்வப் பொழுது ‘படார்-படார்’ சப்தங்களையும் கேட்டதுண்டு. கேரளம் பெரும்பாலும் மலை சூழ்ந்த பகுதி என்பதால், வன விலங்குகளை விரட்டியடிக்க, மனிதர்கள் பாதுகாப்பாகச் செல்ல, ‘வெடி’க்கப் படுவது அக்காலத்திய வழக்கமாக ஆரம்பித்து, இன்று அது சடங்காக மாறி தொடர்ந்து வருகிறது போலும் என நினைத்துக் கொள்வேன்.

ஆனால் வெடிப்பதை ஒர் வழிபாட்டு முறையாகவே மாற்றிக் கொண்டதால், கொல்லத்தில் ஒரு நாசம் நிகழ்ந்துவிட்டது.

உச்ச நீதிமன்றம்,   ‘சப்தத்தின் அளவுகுறித்தும் எப்பொழு தெல்லாம் வெடிக்கக் கூடாது’ என்பது குறித்தும் 2005 லேயே தெளிவாக வழிகாட்டுமுறைகளை வகுத்துள்ளது.  நாம் எந்த வழிகாட்டுதலை மதித்தோம், இதை ஏற்றுக் கொள்ள? இரவு பத்து மணிக்குப் பின் காலை ஆறு மணிக்குள், வெடிக்கக் கூடாது எனச் சொல்கிறது சட்டம். கொல்லத்தில் வெடிக்கப் பட்டது அதிகாலை மூன்று மணிக்கு.

‘ஒழுங்கு மீறலையே’, ஒரு சமுதாய ஒழுங்காகவே மாற்றிவிடும்  நம்மவர்களுக்கு சட்ட மெல்லாம் துச்சம். தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் கரடியாகக் கத்தினாலும் ‘தீபாவளி’ விபத்துக்களை தவிர்க்கிறோமா என்ன? ‘வான வேடிக்கை – பட்டாசு’ களில் இறப்பது ‘தற்கொலை’ செய்து கொள்வதைப் போலத்தானே?

கோவில்களிலும் உள்ளூர் திருவிழாக்களிலும் வெடிக்கப்படும் ‘வெடிகள்’  யாவும் பெரும் பாலும் எந்த நெறிமுறைகளுக்கும் உட்படாத,  எந்த தரச் சோதனைகளுக்கும் உட்படாத ‘உள்ளூர்’ தயாரிப்பாகவே இருக்கும்.  மேலுறையில் எந்தவகையான கெமிக்கல்கள் கலக்கப்பட்டுள்ளன என்பது இருக்கவே இருக்காது. இந்தியாவில் ‘வானவேடிக்கை களுக்கான வெடிகள்’ பற்றிய சட்டங்கள் தெளிவாக இருக்கிறதா என்பது சந்தேகமே!

அவ்வெடிகளில் கலக்கப்படும் ரசாயணங்கள், எந்த அளவிற்கு காற்றை மாசுபடுத்துகின்றன, விஷமாக்குகின்றன,  அனுமதிக்கப்பட்ட மாசின் அளவு என்ன என்பெதெல்லாம் தெரியவில்லை.  

சற்றும் பாதுகாப்பின்றியே, கடும் ஆபத்துகளுக்கிடையே தான் கோவில்கள், சர்ச்சுகள், உள்ளூர் திருவிழாக்கள் போன்ற வற்றில் வெடிபொருட்களை வைத்திருக்கின்றனர்.  கொல்லம் சம்பவம் இதைத்தான் அழுத்திச் சொல்கிறது.

அரசாங்கம், தலையொன்றிற்கு பத்து லட்சமோ என்னவோ அறிவித்துவிட்டது.  அதன் கடமை முடிந்தது.   ஒரு விசாரணைக்கும் ஆணை பிறப்பித்தாகிவிட்டது. அவ்வளவே!  நாமும் வழக்கம் போல, அடுத்த விபத்து நடக்கும் வரை எல்லாவற்றையும் மறந்து, அன்றாட வேலைகளில் மூழ்கிவிடுவோம்.

சிறிதும் பெரிதுமாக, நாட்டில்  இந்தவகை வெடிவிபத்துக்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.  கொல்லம் கொஞ்சம் பெரிது என்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

நாம் யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.  ரிலிஜியஸ் சென்டிமென்டைக் கலக்காமல், கோயில்கள் மற்றும் அனைத்துவிதமான திருவிழாக்களிலும் (திருமண ஊர்வலங்கள் உட்பட), மக்களின் பாதுகாப்பைக் கருதி, ‘வானவேடிக்கை மற்றும் வெடிவழிபாட்டை’ தடை செய்தாக வேண்டும். 


அரசாங்கம், ‘வாக்கு அரசியலை’ கணக்கில் கொண்டு தடைவிதிக்காமல் இருக்கக் கூடும். ஆனால் மதத் தலைவர்கள், கூடுமானால் சர்ச் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் ஒன்று கூடி, திருவிழாக்களில் கூடி வெடிவழிபாடு-வானவேடிக்கை வேண்டாம் எனத் தடைவிதிக்க வேண்டும்.  

செய்வார்களா?

1 comment:

  1. கண்டிப்பா வெடிவழிபாடு என்பது இயற்கையை சீரழிப்பதோடு
    மனித உயிர்களையும் காவு வாங்க ா
    ஆரம்பித்து விட்டதால் தடை அவசியம்.! ஆனால், இதற்குள் பெரிய வணிகமையம் இருப்பதால் கோவிலில் இதற்கு தடையெல்லாம் போடமாட்டார்கள்.! பச்சே ஆ கழிவு சர்க்காரினும் இல்லா பின்ன எந்து செய்யும்.!

    ReplyDelete