Thursday, June 8, 2017

காஷ்மீருக்கு ஒரு பயணம் – பகுதி 3 – குல்மார்க்.

“நாளை குல்மார்க் போகிறோம். காலை 9 மணிக்கு ரோட் பாயிண்டுக்கு வந்துவிடுங்க. குல்மார்க்கை என்றென்னும் மறக்க மாட்டீங்க  பாருங்க..” புதிர்போட்டுவிட்டு, தால் ஏரிக்கரையில் விட்டுவிட்டுச் சென்றார் Cab driver அதுல். 

ஏற்கனவே திகட்டும் அளவு ஸ்ரீநகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்த்துவிட்டபின், பின் எதுதான் நம்மை திக்கு முக்காட வைத்துவிடமுடியும் என்ற நினைவோடு,  சிறு படகு ஒன்றின் மூலம், படகுவீட்டிற்குப் போனேன்.

‘க்யா சாப்.. ஆஜ் கைசே ஹை?’ விசாரித்தார் படகுவீட்டின் ஓனர் சாப்ரி.  ஒவ்வொரு டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கு சென்று வந்ததும், அனைத்து காஷ்மீரிகளும் விசாரிக்கும் கேள்வி இது. இன்றைய தினம் எப்படி இருந்தது? எங்க காஷ்மீர் எப்படி இருக்கு?  அனுபவித்தீர்களா? இத்தகைய கேள்வியை எதிர்கொள்ளாத தினம் இல்லை. அந்த மாநிலம் குறித்து அவர்கட்கு அவ்வளவு பெருமை. ஆஹா... பிரமாதம் என்று பதிலுரைத்துவிட்டால், அவர்களுக்கு உச்சி குளிர்ந்து விடுகிறது. எத்துனை ஆயிரம் டூரிஸ்ட்களைப் பார்த்தி ருப்பார்கள். இதே கேள்வியைக் திரும்பத்திரும்ப கேட்பதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை.  கிடைக்கும் பதிலிலால் பெருமிதம் அடைவதிலும் அவர்கள் சலிப்பதே இல்லை.

சார்.. இன்னிக்கு ‘ஷிகாரா’ போய்விட்டுவாருங்கள். உங்களுக்காக ஷிகாரா இனாமா அளிக்கிறோம் என்றார் சாப்ரி.

அதென்ன ஷிகாரா? சிறுபடகொன்றில் ஏறிக்கொண்டு, விரிந்து பரந்திருக்கும் தால் ஏரியையும், தெரு அமைப்பது போல, வரிசைகட்டி நிற்கும் படகுக் கடைகளுக்கிடையே சுற்றிவருவதுதான் ஷிகாரா. மிதக்கும் போஸ்டாபீஸ், மிதக்கும் விதவிதமான கடைகள் என அனைத்தும்ஏரியினுள். படகுவீட்டிற்குவந்து ரிஃப்ரஷ் செய்துகொண்டு, ஷிகாராவிற்கு தயாரானேன். மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்த ஷிகாரா , இரவு எட்டுமணிவரை நீண்டது. வெனிஸ் கூட இவ்வளவு அழகாயிருக்க இயலுமா என்பது சந்தேகம். அங்கு கோடையில் இரவு எட்டு மணிக்குத்தான் சூரியன் மறைகிறான். அதுவரை படகுச் சவாரி. அருமையான அனுபவம். One cannot ask more. இது பற்றிய புகைப்படங்களை பகுதி 1 ல், பார்த்திருப்பீர்கள்.

இது ரம்ஜான் நோன்பு மாதம். விடியற்காலை முதல் இரவு வரை உண்ணமாட்டார்கள். அவர்கள் இவ்வாறு உண்ணா நோன்பிருக்கும்போது, நான் மட்டும் டிரைவரைப் பார்க்கவைத்துவிட்டு  உண்ணுவது எனக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நான் அங்கிருந்த ஆறுதினங்களிலும் மதிய உணவை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த அப்ரோச் அவர்களுக்கு பிடித்துவிட்டது போல.  

தென்னிந்திய இட்லி-தோசை-பொங்கல்-சாம்பார்-வடைப் பிரியர்கள் வாயைக் கட்டிக் கொள்ளவேண்டும். எளிதில் கிடைக்காது. காலை போஹா எனப்படும் அவல் உப்புமாவின் கொடுங்கோலாட்சியை விரும்பாமல், ‘ப்ரெட்-வெண்ணை’ மட்டும் எடுத்துக் கொள்வதையும், இரவில் ‘சப்பாத்தி-தால்’ எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொண்டேன். கோதுமை எனக்கு ஒத்துவராது. க்ளூடமைன் அலர்ஜி..இரவு முழுவது நெஞ்செரிச்சல் வரும். ஆனால் வேறு தேர்வு இல்லை. ‘சாவல்’ (அரிசி சாதம்) உண்டு. சாதமும் சுவைக்காது..அதற்குத் துணையாக பொருந்தாத் திருமணம் போன்ற ‘தாலும்’ சுவைக்காது. எனவே ‘பெட்டர் ஈவில்’ ரொட்டிதான். உண்டுவிட்டு இரவு பத்து பன்னிரெண்டுவரை, காலை நீட்டிக்கொண்டு படகுவீட்டின் வராந்தாவில் நிலவையும், சிற்றலைகளையும், இரவில் மின்னிக் கொண்டிருக்கும் இதர படகுவீடுகளையும், எதிரே இருக்கும் சங்கராச்சார்யா குன்றையும் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு பிறகுதான் படுக்கை.

காலை சரியாக எட்டேமுக்காலுக்கே, டிரைவர் அதுல் அழைத்துவிடுவார். ‘சார் ரெடியா...?’

‘இதோ வந்துவிட்டேன்’ கிளம்பிவிடுவேன்.

குல்மார்க் நகரம்,  ஸ்ரீநகரிலிருந்து இரண்டுமணி நேரப் பயணம்.  வழியெங்கும் சிறிதும் பெரிதுமாக நிறைய ஊர்கள்.  Breathtaking என்று சொல்ல முடியாவிடினும் வழியெங்கும் அழகான காட்சிகள். குல்மார்கை  நெருங்க நெருங்க, காற்றில் குளுமை கூடிக்கொண்டே போனது. குல்மார்கில் அப்படி என்ன புதிதாக இருந்துவிடப் போகிறது என்ற அசுவாரஸ்யத்துடன் காரில் அமர்ந்திருந்தேன்.

ஒருவழியாக குல்மார்க் வநத்து. குல்மார்க் என்பது வென்பணி சூழ்ந்த மலைமுகடுகளைக் கொண்ட இடம். அவ்லான்ச் எனப்படும் பனிச்சரிவின் காரணமாக பாதிமலைவரை விரிந்து பரந்திருக்கும் வெண்பனி (Snow) போர்த்திய பரப்புகள். அந்த இடத்திற்குச் செல்ல கேபிள் கார்கள் அமைத்திருக்கிறார்கள். 

 இந்த கேபிள் கார்களை, ‘இரண்டு ஸ்டேஜாக’ வைத்திருக்கி றார்கள். முதல் ஸ்டேஜ் 8000 அடிகள் உயரத்திற்குச் செல்லும். 700 ரூபாய் கட்டணம். அடுத்த ஸ்டேஜுக்குச் செல்ல வேறு ஒரு கேபிள்கார். அது 14000 அடி உயரம் வரை தூக்கிச் செல்லும். 900 ரூபாய் கட்டணம்.  இரண்டிற்கும் சேர்த்து அடிவாரத்திலேயே டிக்கட் வாங்கிக் கொள்ளலாம். 1600 கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டேன். நல்ல வேளையாக, உடன் வந்த கைடிற்கு டிக்கட் வேண்டாம் என்று அறிவித்துள்ளார்கள்.  குல்மார்கை அவர்கள், காஷ்மீரியில் ‘குலுமரே’ என்கிறார்கள். எப்படியாவது சொல்லிக் கொள்ளட்டும். A rose is a rose is a rose is rose.

பெரும்பாலான ஆட்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். மைல்கற்கள், கடைகளின் நேம்போர்டுகள், அறிவுப்புகள் யாவும் ஆங்கிலம் மற்றும் உருதுவில்தான். இந்தி இல்லை. இதே காட்சியை ஒரிஸாவிலும் கண்டேன். அங்கே ஒரியா மற்றும் ஆங்கிலம். இங்கே இந்தி தெரியாவிடினும் சமாளித்துக் கொள்ளலாம். என்ன.. அவர்களது அக்ஸென்டை புரிந்துகொள்ள நிதானிக்க வேண்டியிருக்கிறது. மிலுக்கு என்றால் மில்க். இஸ்ஸலெட்ஜு என்றால் ஸ்லெட்ஜ். ஹாரஸு என்றால் ஹார்ஸ் (Horse).  இந்த அக்ஸென்ட் விளங்காமல் சற்று நேரம் விழிக்க வேண்டியிருந்தது.  

முதல் ஸ்டேஜுக்குச் செல்வதற்கான கேபிள்காரில் ஏறிக்கொண்டேன்.  ஜிவ்வென வேகமெடுத்து நம்மை ஏந்திச் சென்ற கணங்களில், கீழே பார்க்க வேண்டுமே... அடாடா.. என்ற ஒரு காட்சி! ஓவியன் வரைந்துவைத்தது போல விரிந்துகொண்டேயிருக்கும் ஓவியங்கள். காஷ்மீர் சால்வைகள் செய்ய பயன்படும் ஷீப் என்னும் ஆட்டுக்கூட்டம், ஆயிரக்கணக்கில் மேய்ந்து கொண்டிருந்தன.  ஆங்காங்கே மேய்ப்பர்களின் குடியிருப்புகள்.  சற்று நேரத்திலேயே பச்சைநிற காட்சிகள் மறையத் தொடங்கியது. பின் காலின் அடியில் கண்கள் கூசும் வெள்ளை நிறப்பனிச்சரிவுகள். வின்முட்டும் சிகரங்கள். டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்திருக்கும் அவலான்சுகளும் வெண்மலைகளும், வின்முட்டும் சிகரங்களும் 70 MM ஸ்க்ரீன் போல விரிந்தது.  அடாடா... மனிதக் கண்கள் அதிகபட்சம் 120 டிகிரிமட்டும் பார்க்கும்படி ஆண்டவன் அமைத்துவிட்டானே? 360 டிகிரியும் பார்க்கும்படி அமைத்திருக்கக் கூடாதா என ஏங்க வைக்கும் காட்சிகள். அவற்றை வர்ணிக்கவார்த்தைகள் போதாது.

‘இதுக்கே மலைச்சுப்போயிட்டீங்கன்னா.. இரண்டாவது கேபிள் கார்ப் பயணம் இருக்கே என்ன செய்வீர்கள்?’ என இன்னும் ஒருகிலோ திருநெல்வேலி அல்வாவைத் தூக்கிப் போட்டார் கைடு.என்ன சொல்ல? வாய்பிளக்க, கண்கள் கொள்ளுமளவு காட்சிகளை உள்வாங்கிக்கொள்ளலாம்.. அவ்வளவே!

முதல் கேபிள்கார் தன் பயணத்தை முடித்துகொண்டது. இரண்டாவது கேபிளுக்குள் செல்வதற்கு முன்னாக, இந்த இடத்தில் உள்ள இயற்கை நீரூற்றுகளையும் ஒரு அருவியையும் இயற்கைக் காட்சிகளையும் காணலாமா என்றார் கைடு. ‘வேண்டாம்.. திரும்பவரும்போது பார்த்துக் கொள்ளலாம்..’ என அவசரமாக மறுத்தேன். திரும்ப வரும்போது அவற்றைப் பார்த்தும் விட்டேன்.

இரண்டாவது கேபிள், புதிய உயரங்களுக்குத் தூக்கிச் சென்றது. எங்கும் பனிப் பிரதேசங்கள். ‘ரோஜா’  நாயகி, ஆச்சர்யத்துடன் பார்த்தது போல பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாவது கேபிள் பயணமுடிவில், ஒரு மலையின் பள்ளத்தாக்கில் நின்றுகொண்டிருந்தோம்.

சொற்பமாகவே கூட்டம். சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பனிப்பிரதேசம் இரண்டு ச.கிலோமீட்டர் பரப்பளவுள்ள பனிச்சரிவு. அதில் பாதிதூரம் வரை ஸ்பெஷல் பூட்ஸ் அணிந்துகொண்டு நடந்தும் செல்லலாம்  அல்லது ஸ்லெட்ஜ் எனப்படும் ஒரு பலகையில் அமர்ந்து கொண்டால் இருவர் இழுத்துச் செல்கிறார்கள்; அப்படியும் செல்லலாம். 
பாதி தூரத்தை எட்டியபின், ஸ்லெட்ஜ் முடிந்து,  ‘ஸ்கீயிங்’ எனப்படும் பனிச்சரிவிற்கான ஸ்னோபோர்டுகளில் பயணித்து மீதி தூரத்தைப் அனுபவிக்கலாம். ஒன்றும் வேண்டாம் எனில் சும்மா  நின்றுகொண்டு, அன்னாந்து   வேடிக்கை பார்க்கலாம். 

நான் எந்த வாய்ப்பையும் விட்டுவிடத் தயாரில்லை.
சாதாரண ஷூ வேலைக்கு ஆகவில்லை. பத்தடி ஏறியதும் இருபதடி சறுக்கியது. மூச்சு வாங்கியது. இங்கே ஆக்ஸிஜன் குறைவு என்றார் உடன் வந்தவர்.  ஏன் ரிஸ்க் என, ஸ்லெட்ஜ்க்கு சொல்லிவிட்டேன். உட்காரவைத்து இழுத்துச் சென்றார்கள். அப்படியும் ஓரிடத்தில் குட்டிக்கரணம் அடித்தேன்.  நல்லவேளையாக உடனே தூக்கிவிட்டார்கள்.
பனித்துகள்களை அள்ளியெடுத்து விளையாடலாம். விவரம் புரியாமல், வெகுநேரம் ஸ்னோவை வெறும்கைகளால்  அள்ளிவைத்து விளையாடியதால், விரல் நுனியொன்றில் ‘ஸ்னோபைட்’ ஏற்பட்டுவிட்டது.

அடுத்து ஸ்கீயிங்!  தனியாகவா அல்லது கூட ஆள் வரட்டுமா என்றார்கள். அங்கே தனியாக யாரையும் விடுவதில்லை என்பது வேறுவிஷயம். சற்றே சறுக்கினாலும் 5000 அடி பள்ளம். எலும்புகூடத் தேறாது. ஃப்ரொஃபெஷனல் ஒருவரின் ஸ்னோபேடில் நானும் ஏறிக்கொண்டு வளைந்து நெளிந்து அந்த ஏரியா முழுவதும் சறுக்கிவிளையாடினேன். என்ன ஒரு அனுபவம்? ஆஹா...

எச்சரிக்கை. 1. இங்கே  தயக்கமின்றி பேரம் பேசவேண்டும். அவர்கள் இஷ்டத்திற்கு கூலி கேட்கிறார்கள். 2. என்னைப்போல அனைத்திலும் விளையாட வேண்டுமென ஆர்வமிருந்தால் தேவையான க்ளவுஸ், கம் பூட்ஸ் அணிந்து கொள்ளவேண்டும்.இவை வாடகைக்குகிடைக்கும். குளிர்தாங்காது எனில் தரமான ஸ்வெட்டர் அவசியம்.  என்னைப்போல ஒரு சாதா ஷூவும், சாதா ஸ்வெட்டரும், க்ளவுஸ் இல்லாமலும் போனால், அகப்பட்டீர்கள். இவை இல்லாமலும் போகலாம். சும்மா வேடிக்கை பார்க்கலாம். அவ்வளவே.

சிம்லா, ரொடாங் பாஸ் என பல இடங்களில் வெண்பனியினைக் கண்டிருந்தாலும் குல்மார்கின் அழகே அழகு. LoC is near to this hill.

இந்த அத்தியாயத்தோடு காஷ்மீர் பயண அனுபவத்தை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் இதுவே நீண்டுவிட்டது.  அடுத்த அத்தியாயத்தோடு (அதில் சோனாமார்க் மற்றும் பெஹல்காம் பற்றி எழுதுவேன்) முடித்துக் கொள்வேண். உறுதியாக J.


Click here to view some Photo Collections 




Hazrathbal Mosque (Courtesy - net) 






1 comment:

  1. ரசனையும் கற்பனையும் கொப்பளிக்க தரமான பயண கட்டுரை. மலரும் நினைவுகளாக வெகுவாக ரசித்தேன்.

    ReplyDelete