Tuesday, March 6, 2012

பெயரில்லாப் பெண்

“இப்ப நீ அழுகைய,  நிறுத்தப் போறியா இல்லியா?

“ஷாலினியின்அழுகை சப்தத்தையும் மீறி கத்தினார்  ராகவன்.

ம்ம்ம்ம்ம்..!. இவரது மிரட்டலுக்கெல்லாம்,  ஷாலு அழுகையை நிறுத்துவதாகக் கானோம்! மாறாக  ராகவனின் கத்தல் அவளை இன்னும் கொஞ்சம், கூடுதல் குரலெடுத்து அழ வைத்தது.

“ஓங்கி,முதுகில் ஒண்ணு வைக்கலாமா?” என எரிச்சலும் ஆத்திரமும் வந்தது ராகவனுக்கு! 

‘கூடாது; குழந்தைகளைச் சமாதனப்படுத்த, கோபப்பட்டால் ஆகாது 'ஹிந்து'வில் என்றோ படித்த ஞாபகம் வந்தது!  சமாதனப் படுத்தும் நட வடிக்கையாக பிரிட்ஜைத் திறந்து, ஏதேனும் ‘ஸ்வீட்  அல்லது ‘சாக்லட் இருக்கிறதா எனத் தேடினார். எது, எங்கே இருக்கிறது எனப் பிடிபட வில்லை!  வெஜிடபிள் டிரே முதல் தேட ஆரம் பித்தார். கடைசியில் ‘ஃப்ரீசருக்குள் இருந்த்து, "பைவ் ஸ்டார்" சாக்லட்கள். இந்தா, இதைச் சாப்பிடு என்றார். அதைப் பிடிங்கி, தூர எரிந்தாள் ஷாலு. 


இந்த ‘பிடாரியை எப்படி சமாதானப் படுத்துவது எனப் புரியாமல்,  கையாலா காதவன் ஆத்திரப்படுவது போல, ஷாலுவை நோக்கி கையை ஓங்கினார்.  இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. 

ராகவனுக்கு,  நாற்பதைத் தொடும் வயது. லேட் கல்யாணம்; லேட் குழந்தை. ஷாலு மூன்றாவது படிக்கிறாள். மூத்தவன் ஷரத். ஆறாவது படிக்கிறான்.  தற்சமயம் ஷாலு அழுதுகொண்டிருக்க, ஷரத் டியூஷன் போயிருக்கிறான்.

“வா.. நாம ‘போகோ பாக்கலாம். ஷாலுவை அழைத்தான்.

சனி, ஞாயிறு தவிர, மற்ற தினங்களில் 'கார்டூன் சானல்' பார்க்கக் கூடாது என, தடை விதித்திருந்தான், ராகவன். இப்போது, அதை அவனே மீற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.   அப்போது போகோவில் ‘மிஸ்டர் பீன் ஓடிக்கொண்டிருந்தார்.   'அவர்'  ஷாலுவின் அழுகை டெஸிபலை கொஞ்சம், பாதுகாப்பான நிலைக்கு, கீழிறங்கி கொண்டு வந்தார். 

அப்போது, வாசல் கேட்டை, யாரோ உடைக்கும் சப்தம் கேட்க, பதறிப் போய் வாசலுக்கு ஓடினார்.  மிரளும்படியாக  ஒன்றும் இல்லை! டியூஷனுக்குப் போய்த் திரும்பும், அவரது மூத்த புதல்வன், தனது சைக்கிளால் மோதி, கேட்டைத் திறந்து கொண்டிருந்தான்!

“இறங்கி கேட்டைத் திறக்கக் கூடாது? எதுக்காக இப்படி கதைவை உடைக்கிறே?

இது, வேறு எவரையோ பார்த்து சொல்லப் பட்டது போல, அவரைக் கண்டு கொள்ளாமல் உள் நுழைந்தான் ஷரத்.

“ஏண்டா, நான் ஒருத்தன் சொல்றேன்ல... காதுல விழுல?”

“அப்பா, பசிக்கிது, டிபன் கொண்டா..!”   உத்தரவிட்டான் ஷரத்

கழற்றிய ஷூக்களை, மூலைக்கொன்றாய் வீசியெறிந்தான். டிரஸ்ஸைக் கழட்டி, டைனிங் டேபிளின் மேலே தூக்கிப்போட்டான்

“போடா.., போய் கைகால் கழுவிக் கொண்டு வா

அவரது, இந்த கோரிக்கையும் உதாசீனப்படுத்தப்பட்டது.


‘அப்பா... பசிக்கிதுங்கிறேன்ல...

ஃபிரிட்ஜைத் திறந்து, தோசை மாவை எடுத்தார்.  அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டார். கொஞ்சம் பொறுத்து,  கல் காய்ந்துவிட்டதா  என சோதிக்க நினைத்து, அடுத்த கணம், ‘ஐயோ.. என்று அலறியவாறு கைவிரல் களை உதறிக் கொண்டார்.


‘அட. சட்,  ஒரு மக்கில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு, விரல் எரிச்சல் அடங்க, அதில் வலதுகையை விட்டுக் கொண்டார். இடது கையால் தோசை வார்க்க முயன்று தோற்று, பின், வலது கையாலேயே தோசை வார்த்தார்.

அது தோசை வடிவில் வராமல், இட்லி மாதிரியோ, உப்புமா மாதிரியோ 
வந்தது.

“அப்பா, என்ன இது..?

"முதல் தோசை அப்படித்தாண்டா வரும். சாப்பிட்டு விடு. அடுத்த தோசை நன்றாக வரும்."

“அப்ப நான் அடுத்த தோசையையே சாப்பிடுகிறேன். நீ வேணுமானா இதைச் சாப்பிடு!

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி போலத்தான் ஆயிற்று, அடுத்த 
தோசை வாக்குறுதியும்.

தட்டு நிறைய ‘கும்பலாக’, தோசைக் குப்பை நிறைந்துவிட்டதி தவிர, வட்ட 
வடிவில் ஒன்று கூட தேறவில்லை.

கொஞ்சம் இரு, இதோ வர்ரேன்... சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே ஓடினார்.  ‘ஒரு முழ நீளத்திற்கு நூடுல்ஸ் பாக்கட் வாங்கிக் கொண்டு 
திரும்பினார்.

“நூடுல்ஸை, பச்சைத் தண்ணீரிலேயே  போடனுமா? இல்லை, தண்ணீர் கொதிச்சவுடன் போடனுமாசந்தேகம் வந்துவிட்டது. விளம்பரத்தை மனதில் ஓடவிட்டுப் பார்த்தார். ம்ம்ம்.. ஒன்றும் பிடிபட வில்லை.

சரி, இதை 'எப்படித் தயாரிப்பது' என அச்சடித்து வைத்திருப்பானே, அதைப் படிக்கலாம் என்றால், “கிராதகன் இவ்வளவு பொடியாகவா, பிரின்ட் செய்திருப்பான்? சலித்துக் கொண்டு, மூக்குக் கண்ணாடியைத் தேடி அணிந்து 
கொண்டு படித்து ........

‘அப்பா, ஒரு டூ ஹண்டரட் ருபீஸ் குடுத்தால், நான் போய், கார்னர் கடையில் பீட்ஸா வாங்கிட்டு வர்ரேன், இல்லாட்டி, நீயே  ஃபோனில் ஆர்டர் பண்ணு.

ராகவனுக்கு, 'நூடுல்ஸ்' கௌரவப் பிரச்சினையாகிவிட்டது.

“கொஞ்சம் இருடா, ரெண்டு நிமிஷத்தில் நூடுல்ஸ் ரெடியாயிடும்.

தயாரித்த நூடுல்ஸை, பிளேட்டில் வைத்து, மகனிடம் நீட்டினார். 

அடுத்த நொடி, “அப்பா என்ன இது, நூடுல்ஸ், அசிங்கமா? மசாலா பொடி போட்டியா இல்லியா?

“மசாலா பொடி எந்த டப்பியில் இருக்குன்னு தெரியலயேடா? “

தட்டு நிறைய வைத்திருந்த நூடுல்ஸை எறிந்துவிட்டு, ஒரு பிஸ்கட் 
பாக்கட்டை எடுத்துக் கொண்டு தனது  ரூமிற்குப் போய்விட்டான் ஷரத்.

அதற்குள், சற்று நிறுத்தியிருந்த அழுகையை, மிகுந்த உத்வேகத்துடன் 
ஆரம்பித்துவிட்டாள் ஷாலு!

அவளின் அழுகைக்கு இப்போது காரணம் புரிந்து விட்டது! இந்த முறை 
ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை ராகவன்.  போனில் பீட்ஸாவுக்கு ஆர்டர் 
செய்து விட்டார்.

பீட்ஸா வரும் வரை? அவள் அழுது கொண்டிருக்கட்டும் அல்லது ‘கிரீம்’ பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கட்டும்.

‘பூ வச்சுருக்கேன், சாரே.... குரல் கேட்டு வாசலுக்கு வந்தார். 


பூக்காரி!

‘பூ வேணாம்..

‘அட.., இது வாடிக்கையா கொடுக்கும்  பூ... வெள்ளிக்கெளம அதுவுமா  
வேணாங்குற?

இந்த உலகில் ஒருவரும் தன்னை மதிக்க்க் கூடாது எனத் தீர்மாணித்திருக் கிறார்களா? பூக்காரி, அவள் பாட்டுக்கு பூப் பொட்டலத்தை வைத்துவிட்டுப் 
போய்விட்டாள்.


அதை எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது, சைக்கிள் பெல் கேட்டது.


பால்காரர்!


“சார், அரையா ஒண்ணா?பால்காரன் தான்.

‘எதுக்கு வம்பு?,  ‘ஒண்ணு என்றார்.

“போய் பெரிய பாத்திரம் எடுத்து வா, ஒரு லிட்டருக்கு சின்னதா தூக்கிட்டு வர்ரியே?

“ஓ.. ஒரு லிட்டர் இது கொள்ளாதா?

நடுவில் ஃபோன். 

அவரது தம்பிதான். “அண்ணா, ஞாயித்துக் கிழம, குலதெய்வம் கோவிலுக்குப் போவலாம்னு இருக்கேன். அபிஷேகத்துக்கு என்னென்ன சாமான் வாங்க னும்? உனக்கு தெரியவில்லையென்றால், அண்ணிய கேட்டுச் சொல்லு

"ஒரு பய என்னை மதிக்க மாட்டானா?"

“எல்லாம், எனக்கும்  தெரியும்! ஒரு அரைமணி நேரம் கழித்து  ஃபோன் 
பண்ணு, இப்ப நான் பசங்களுக்கு டிபன் செஞ்சுக்கிட்டிருக்கேன்

“சரி... சரி , நான் அண்ணிகிட்ட மொபைல்ல பேசிக்கிறேன் 

பொறுமையிழ்ந்த ராகவன், வாசல் பக்கம் எட்டிப் பார்த்தார். தூரத்தில் வரும் ‘மெரூன் நிற சேலையை கண்டு கொண்டார்.

அவசர அவசரமாக,  பையன் வீசியெறிந்த ஷூக்களை ஓரமாக வைத்தார். இறைந்து கிடந்த துணிகளை, டைனிங் டேபிளுக்கடியில்  பதுக்கினார். 
சமையல் அறையினுள் புகுந்து, குவித்து வைத்திருக்கும் தோசை விள்ளல் களை குப்பைக் கூடையில் கொட்டி, மூடினார்.

அதற்கும் ‘மெரூன் நிற சேலை வீட்டிற்குள் வந்துவிட்டது.

இப்போதெல்லாம், குழந்தைகளுக்கு ‘மோப்ப சக்தி வந்துவிட்டதா என்ன? 
பெட் ரூமில் ‘போகோவில் முழுகியிருந்த ஷாலு, ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டாள். 


"மம்மி, என்னை விட்டுட்டு எங்கே போனே?" அழ ஆரம்பித்தாள்.


ஆனால் இந்த அழுகை முன்பு அழுதது  போல, ஆங்காரமாக இல்லாமல், 
இரைஞ்சும் அழுகையாய் இருந்தது.

அவளைத் அப்படியே இடுப்பில் தூக்கிக் கொண்ட அவள், என்ன பண்ணுது எண்ணோட ஷரத் குட்டி? கொஞ்சிய வண்ணம் அவனைத்தேடி, குழந்தைகள் 
ரூமிற்குள் சென்றாள். 


அங்கு ஷரத் ‘தூங்குவதுபோல படுத்துக் கொண்டிருந்தான்.

‘சரத்துக்கு கோவமா?  கண்ணுகுட்டி  எண்ண சாப்பிட்டுது?அவன் 
தலையைக் கோதினாள்!

இடையில் புகுந்த ராகவன், ‘பசங்களுக்கு தோசை செய்து போட்டுட்டேன். “ 
என்றார்.

ம்ம்.. அவளும், ராகவன் பதிலைக் கண்டு கொள்ளவில்லை.

குனிந்து, ஷரத்தை முத்தமிட்ட அவள், “இதோ வரேண்டா செல்லம் என்று கூறிவிட்டு, உடையைக் கூட மாற்றாமல் சமயலறைக்குச் சென்றாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் இரண்டு பிளேட்களில் சூடாக, மொறு-மொறு வென தங்க நிறத்தில் தோசை, சட்னியிடன் கொண்டு வந்தாள்.

ஷாலுவை மடியில் உட்கார வைத்துக் கொண்டு ஊட்டிவிட்டுக் கொண்டே, ஷரத்திடம், ‘அப்படியே, ஆ.... காமி, அம்மா ஊட்டி விடுவேனாம், நீ சமத்தா 
சாப்டுவியாம்..

“ஒன்னும் வேண்டாம் போ

‘வாடா செல்லம்... அவனையும்  இழுத்து இன்னொரு மடியில் வைத்துக் 
கொண்டு ஊட்டிவிட, இருவரும் மறுப்பின்றி, சாப்பிட்டனர்.

இது என்ன மாயம்?

வாயைத்துடைத்துவிட்டு, “பாத் ருமிற்குப் போய, வாய் கொப்பளித்துவிட்டு தூங்குங்கள்”. 


ஆளுக்கொரு முத்தம் கொடுக்க, "ஓ.கே மம்மி" என்ற குழந்தைகள் , பிரஷ் பண்ணிவிட்டு, அம்மாவுக்கு ‘குட் நைட் சொல்லிவிட்டு தூங்கப் போனார்கள்.

“இப்ப, நீங்க சாப்பிட வாங்க..

“இல்லை, ஒரு சேஞ்சுக்கு பீட்ஸா ஆர்டர் பண்ணிவிட்டேன். நான் அதைப் சாப்பிடுகிறேன்.

‘இதென்ன புதுப் பழக்கம், அதெல்லாம் வேண்டாம், தோசையே சாப்பிடுங்க...

பூனைக்குட்டி போல, அவள் வார்த்துப் போட்டவற்றை சாப்பிட்டு விட்டு படுக்கையறைக்குப் போனார் ராகவன்.

வேலையை முடித்துவிட்டு, உறங்க வந்தாள், அவள்.

இரவில் திடீரென யாரோ தனது கால்களை பிடித்து விடுவதுபோல உணர்ந்த அவள், சட்டென எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

“என்ன பன்றீங்க?

‘ஒன்னுமில்லையே, இன்னிக்கு கல்யாண வீட்டிக்கு போயிருந்தேல்ல, அங்கு உனக்கு வேலை அதிகம் இருந்திருக்கும், அதான் லேசா காலைப் பிடிச்சு விட்டேன்...

"வேலையெல்லாம் அதிகமில்லை, அதுக்காக காலையெல்லாமா பிடிச்சுவிடிவீங்க.. " எனக்கு மகா பாவம் ஆயிடும். பேசாம தூங்குங்க.

அவள் தூங்கி விட்டாள். ஆனால் ராகவன் நெடு நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
=======================================================================================

அது சரி.. அந்த பெண்ணின் பெயரை, கடைசிவரை சொல்லவே இல்லையே 
என்கிறீர்களா? இந்தியாவில் உங்களுக்குத் தெரிந்த எந்தப் பெண்ணின் 
பெயரையும் வைத்துக் கொள்ளுங்கள்; எல்லாப் பெயரும் பொருந்தும்.

08/03/2012 அன்று  உலக மகளிர் தினம்.  அனைத்துப் பெண்களுக்கும் எனது மகளிர்  தின வாழ்த்துக்கள். இந்தியாவின் ஜீவன் உங்களால் தான், இன்னமும் கொஞ்சமாவது நீடித்துக் கொண்டுள்ளது! 

=======================================================================================







11 comments:

  1. மகளிர் தினத்திற்கு நல்ல சிறுகதை. நன்றி சார்.

    ReplyDelete
  2. kathaila yaaro oruthavanga pathi solluveenganu partha , kadaisila namma veetukulla erukkaravanga arumaiyai neabagapathuteenga ...thnx

    ReplyDelete
  3. ஹாலிவுட் ரசிகன் அவர்களுக்கு! நீங்கள் எனது கதைகளை உடனே படித்துவிடுகிறீகள்! மிக்க நன்றி. அன்புடன். பலராமன்.

    ReplyDelete
  4. மகளிர் தின சிறப்பு சிறுகதை அருமை சார். அதிலும் அந்த பின்குறிப்பு முத்தாய்ப்பாய் அமைந்தது

    ReplyDelete
  5. அன்பான அன்பு, பாலச்சந்தர்!
    இதனை எழுதும்போது, நன்பர்களுக்கு பிடிக்காமல் போய்விடுமோ என சந்தேகப்பட்டேன். நன்றி அன்பு/பாலச்சந்தர்

    ReplyDelete
  6. nalla kathai...makaleer thinaththai munnittu...arumai..vaalththukkal

    ReplyDelete
  7. கதை போலவே இல்லை. எங்காவது இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.. well written..

    ReplyDelete
  8. Thanks Shri Bandhu and Shri Madurai Saravanan!

    ReplyDelete