Sunday, September 14, 2014

நடந்தது குறித்து எனக்கு வருத்தமேதும் இல்லை....


வேம்பநாதன். 

விந்தைப் பெயர். ஒருவேளை அவனது குலதெய்வத்தின் பெயராக இருக்கக் கூடும்!. பெயரை வைத்துக் கொண்டு வயதைச் சொல்லுவதாக இருந்தால் தாராளமாக ஐம்பது என்றுதானே சொல்லுவீர்கள்? மன்னிக்க வேண்டும் வேம்பநாதனுக்கு வயது இருபத்து நாலு தான்.

வேம்பன் பல விதங்களில் வினோதன். வைரமுத்துவை வரிக்கு வரி கிலாசிப்பான். “குறுக்கு சிறுத்தவளைப்” பற்றி ஒரு மணி நேரம் பேசுவான். திடீரென வள்ளலார் என்பான். வராத இங்கிலீஷுடன் மல்லுக்கு நிற்பான். ஒற்றைக் கடுக்கன். சாசுவத தாடி. பனியன் போட மாட்டான். கற்றாழை போலவோ அமோனியா போலவே அவனிடமிருந்து நிரந்தர நாற்றம்.

படிக்கிறானா இல்லையா தெரியாது; சதா ஒரு ஆங்கிலப் பத்தகத்தை இடுக்கிக் கொண்டிருபான். நிலை கொள்ளாத நவீன இளைஞனுக்கு உதாரண புத்திரன். இன்ஜினியரிங் டிராப் அவுட்.. கேட்டால் “டிராப் பை மை சாய்ஸ்” என்பான். வேலைக்குப் போவதாக உத்தேசமே இல்லை! வேலையெல்லாம் பூமிக் கிரக வாசிகளுக்குத்தான். இவனுக்கு இல்லை.

“என் கூட வந்து கடையைப் பார்த்துக் கொள். தொழிலைக் கற்றுக் கொள்” என்ற அப்பாவை, அடிக்கப் போனான். அவன் அப்பா ஒரு ஆட்டோ மொபைல் ஸ்டோர் வைத்திருக்கிறார். அவரை அடிக்கப் போனது அம்பாஸிடர் ஸ்பிரிங் பிளேட்டால்!

ஒரு முறை அவன் அப்பவிடம் பேசினேன். “ஏதாவது செய்யக் கூடாதா?“ என்றேன். என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, ‘அவனுக்கு திவசம் செய்துவிட்டேன்’ என்றார். அவ்வளவு தூரம் வீட்டில் அமளி செய்திருக்கிறான். நோக அடித்திருக்கிறான்.

டிபிக்கல் அம்மா. அப்பாவுக்கு தெரியாமல் வேம்ப நாதனுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கொடுக்காவிட்டால், ‘தேவடியா......’ என்பான். 

மகனுக்கு புத்தி வேண்டி வாரத்தில் ஏழு நாள் விரதம் இருக்கிறாள். சகல அம்மன்களுக்கும் உண்டியலில் காசு சேர்ந்த்து கொண்டிருந்தது தான் மிச்சம்.

இந்த கிறுக்கன் எனக்கு நண்பன். பள்ளி சினேகிதன் பள்ளி நாளிலிருந்தே!

அவனுக்கு தற்போதைய பிரச்சினை வேறு வடிவில்! காதல்!!  போதைக் குரங்கிற்கு தேளும் கொட்டியது போல, இவன் காதலில் விழுந்தான்.

யாருக்கு வேண்டுமானாலும் நன்பனாக இருக்கலாம். ஆனால் காதலில் விழுந்தவர்களுக்கு, அதுவும் ஒரு தலைக் காதலர்களுக்கு நண்பனாக இருப்பதைப் போன்ற ஒரு இம்சையை, அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். பேசியே சாகடிப்பார்கள்!!

ஒரு நாள், எனது கடைக்கு வீட்டில்ருந்து, ஆல்டோவில் சென்று கொண்டிருக்கும் பொழுது, வழியில் இவனிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். கையைக் காட்டி வண்டியை நிறுத்தினான்.

“ஏண்டா... கொஞ்ச நாளா உன்னை ஆளைக் காணோம்? பாக்கவே முடியலை” என்றான் வேம்பன்.

‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லேடா.. பிசினஸில் கொஞ்சம் பிஸியாகிட்டேன்.. அவ்வளவுதான்.. வா.. வா. வண்டியில் ஏறிக் கொள். உன்னை டிராப் செய்கிறேன்.’

எங்கே செல்லப் போகிறான். ஏதாவது ஒரு தெரு முக்கில், இவனைப்போல சில பேர் காத்துக் கொண்டிருக்கக் கூடும். அவ்வளவே!

நகரின் மெயின் ரோடில் வண்டி சென்று கொண்டிருந்தது.

திடீரென் உற்சாகமானான் வேம்பன்.

“மச்சான், அதோ வர்ரா பாருடா... அவதான் என் ஆளு...”

“யார்?”

கல்லூரிக்கு கும்பலாக சென்று கொண்டிருக்கும் ஒரு மலர்க் கூட்டத்தைக்  காட்டினான்.

நான் ‘லுக்’ விடும் கோஷ்டியைச் சேராத வேற்றுக் கிரக வாசி. சற்று சங்கடத்தோடுதான் அந்தப் பெண்களைப் பார்த்தேன்.

“நிறைய பேர் வர்ராங்க...யாருடா..?”

“நடுவில வரும் மஞ்ச கலர் சுடிதார் தான்டா!”

பார்த்தேன்.

அந்த வயது பெண்களுக்கே உரிய ஜொலிக்கும் முகம். நேர்த்தியாக திருத்தப்பட்ட தலைமுடி, புருவம். சிக்கென்ற உடல் வாகு. அடக்கமான ஹேண்ட் பேக்குடன், உலவும் ஓவியம் போலத்தான் இருந்தாள். உண்மையில் அந்த மலர்க்கூட்டத்தின் ‘ரோஜா’ அவள் தான்.

அந்த தேவதைக்கு இவனா?

‘எப்படிடா இருக்கா..?’

‘ம்ம்ம்...’

“ம்ம்ம்ன்னா என்ன அர்த்தம்? நல்லா இருக்கால்லே?”

“நல்லா இருக்கா!”

‘அவ பேர் என்ன?’

‘நிவேதிதா..’

“அவளைத்தான் கட்டிக்கப் போறேன்..”

“அவ கிட்ட கேட்டுட்டியா..?”

“இன்னும் இல்ல...”

‘அவ அப்பா என்ன செயறார்?’

‘அது ஏதோ ஒரு ஆபீஸில வேலை செய்யுது..!’

அதுவாம்.

‘சரி... நீ இங்க இறங்கிக்க.. நான் வேற வழியா போறேன். கஸ்டமரைப் பாக்கனும்.. வேலை இருக்கு”

அதன் பின் ஒரு வாரம் அவனைப் பார்க்க இயலவில்லை.

ஒரு நாள், அவனே என்னைத் தேடி கடைக்கு வந்தான். பிஸியான நேரம். வேம்பனுக்கு விவஸ்த்தை கிடையாது. கஸ்டமர் இருக்கிறார்களே என ஒதுங்க மாட்டான். எனவே, எனது அப்பாவிடம் கொஞ்சம் கல்லாவில் உக்காரு எனச் சொல்லிவிட்டு வேம்பனை இழுத்துக் கொண்டு வெளியே வநதேன்.

‘கண்ட கழிசடைகளுடன் உனக்கு என்ன சேர்மானம்..’ என அப்பா முனகுவது காதில் விழுந்தது.

“என்ன, சொல்லு.. இப்ப நான் பிஸியா இருக்கேன்..”

அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

‘அவ கிட்ட கேட்டேண்டா..’

‘எவ கிட்ட...? ‘

‘அதாண்டா, நிவேதிதா..!’

ஓ, அதுவா? ... என்ன சொன்னா?”

இந்த கால சினிமா நாயகிகள் போல எங்கே அந்த தேவதை, இந்த உருப்படாதவனுக்கு, ஓ.கே  சொல்லிவிட்டிருப்பாளோ என அச்சமாகத்தான் இருந்தது.

அவன் முகத்தில் குரூரம் பரவியது.

“பரதேசி நாயி.. பெரிய ரம்மைன்னு நினப்பு..”

‘என்னதான் சொன்னா?”

“சீ... போடான்னுட்டா..”

‘அவளை என்ன பண்றேன் பாரு...’

‘அவளை ஒரு மயிரும் புடுங்க முடியாது.. உன் லட்சனம் அப்படி இருக்கு.. ஒழுங்கா உருப்படற வழியப் பாரு.. பொன்னுங்க தானா கிடைக்கும்...’

அவன் காதில் எதுவும் விழுவதாகத் தெரியவில்லை.. கொஞ்ச நேரம் ஆக்ரோஷத்தோடு உருமிவிட்டு சென்று விட்டான்.

எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமாகத் தெரியவில்லை. அந்த பெண் இவனிடம் பேசியிருந்தால்தான் ஆச்சரியம்.

அடுத்த சில நாட்களாக ஆளைக் காணவில்லை. எனக்கும் கூட அவன் வராதது  சௌகரியமாகத்தான் இருந்தது. அவன் புலம்பலை எந்த நேரமும் எப்படிக் கேட்டுக் கொண்டிருப்பது?

அன்று புதன் கிழமை. காலை நேரம். ஒரு பர்சேஸுக்காக வெளியூர் செல்ல வேண்டிருந்தது. ஆல்டோவை அப்பாவிடம் விட்டுவிட்டு, அப்பாவின் ஸ்கார்பியோவை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

காலை நேரத்தில், பிரதான சாலையை கடந்து செல்வது, சலிப்பூட்டும், டென்ஷனூட்டும் வேலை. இஷ்டப்படி வளைந்து திரும்பும் அவசர ஸ்கூல் ஆட்டோக்கள், ஹாரனை விட்டு கையை எடுக்காத ஃபோர் வீலர்கள், எதோ தன் வீட்டு முற்றத்தில் இருப்பது போல செல் ஃபோனில், இடுக்கிய வண்ணமாகவே கிலோ மீட்டர் கணக்கில் பேசிக் கொண்டே செல்லும் இரு சக்கர வாகணங்கள்,  கொலை செய்ய லைசென்ஸ் எடுத்திருப்பது போல மிரட்டும் டிப்பர் மற்றும் மண் லாரிகள். எதிரே எப்பொழுதும் போல கொத்துக் கொத்தாக வண்ணமயமாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள்.

பொறுமையாக ஸ்டியரிங்கில் கைவைத்து காத்திருந்தேன்.

எதிரே யார்?

நம்ம வேம்ப நாதன். சுற்று முற்றும் பார்த்த வண்ணம், யாருக்கோ காத்திருப்பது போல நின்று கொண்டிருந்தான். இந்த நேரத்தில், அவனுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது?  என்ன, அந்தப் பெண் நிவேதிதாவை பார்வையிட நின்று கொண்டிருப்பான்.

நான் நினைத்த மாதிரியே, எதிரே வந்து கொண்டிருந்தாள் நிவேதிதா; தோழிகள் புடை சூழ. 

பிங்க் நிற சுடிதார். அதிசயமாய் ஒரு சிறிய பொட்டும், ஒற்றை ரோஜாவும் வைத்துக்கொண்டிருந்தாள். இன்று பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாகவே இருந்தாள்.

அவளைப் பார்த்த்தும் சாலையின் சாலையின் இடது புறம் நின்றிருந்த வேம்பு, அவசரமாக சாலையைக் கடந்து வலது புறம், அவளை நோக்கி  செல்ல ஆரம்பித்தான். எனக்கும் அவனுக்கும் ஒரு பதினைந்து அடி தூரம் இருக்கும்.

என்ன செய்கிறான் அவன்?

சாலையை கடக்க ஆரம்பிக்கும் பொழுதே, சட்டையின் பின்னாலிருந்து ஒரு பாட்டில் போன்ற ஒன்றை எடுக்க ஆரம்பித்தான். நானும் காரை மெல்லச் செலுத்தினேன்.

மை காட்.. அவன் எடுத்தது ‘அமில பாட்டில்’. நிவேதிதாவை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான்.

தீர்மாணிக்க நேரமில்லை. நான் காரை உட்ச பட்ச ஸ்பீடில் செலுத்தினேன் அவனை நோக்கி.
     -----------

ஏண்டா, நீ நல்லாத்தானே காரை ஓட்டுவே, இப்படி செய்துட்டியே? காரை நான் தான் ஓட்டினேன் என சொல்லிவிடுகிறேன்டா.. இல்லாட்டி வேறு யாராவது பெயரைப் போட்டு கொடுத்திடலாம்ப்பா.. என்னால் அது முடியும்டா.. செலவைப் பத்திக் கவலை இல்லை. நீ வெளியே வந்துடுடா..!

வேண்டாம்பா.. நான் தான் தப்பு செய்தேன்.. தண்டனை எனக்கே வரட்டும்.. நீ கவலைப் படாதே...

-----------
எனக்கு கொஞ்சம் அதிர்ஷம் இருந்தது! 'விபத்து' நடந்த அன்றைக்கு வேம்பு குடித்துவிட்டு வந்திருகிறான். கோர்ட்டில் அது கொஞ்சம் சாதமாகியது. தீர்ப்பு வழங்கும் போது, வேம்பின் அப்பா வரவில்லை. அவன் அம்மா வந்திருந்தாள். கொலைகாரப் பாவி என, என் மீது மண்ணை விட்டெறிந்தாள்.

செக்ஷன் 304-A படி குற்றம் விளைவித்திருந்தாலும், பாதிக்கப் பட்டவர் குடிபோதையில் இருந்தது, மருத்துவ ரீதியாக நிரூபிக்கப் பட்டதால்..... ............மேஜிஸ்ட்ரேட் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

ஆறு மாதம் சிறை தண்டனை... டிரிவிங் லைசென்ஸ் முடக்கம்.. அபராதம்.

ஆறுமாதம் உள்ளே செல்வது குறித்து எனக்கு சற்றும் வருத்தம் இல்லை. 

உண்மையில் நடந்தவை குறித்து மகிழ்ச்சியே!

நிவேதிதா என்ன செய்து கொண்டிருப்பாள்?

அன்று சாலையில் “எதிர்பாராது  நடந்த விபத்து” அவளின் நினைவிலிருந்துகூட அகன்றிருக்கக் கூடும். 

அப்படியே இருக்கட்டும்.





5 comments:

  1. ரசித்தேன் ,கறபனையில் நிவேதிதாக்களை காப்பாற்ற முடிகிறது ,நடப்பில் முடியாதது சோகம்தானே பலராமன் ?

    ReplyDelete
    Replies
    1. Yes Sir.. I wish no more Victims in India...
      Thank U

      Delete
  2. கற்பனை ஆயினும் . இனிதே சொல்லப்பட்ட நீதி கதை . மதுரை நிகழ்வின் தாக்கம் . நன்று . சரி நீங்கள் கார் ஓட்டுங்களேன் !

    ReplyDelete
  3. இயல்பான நடை, நல்ல எழுத்தோட்டம். மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete